பாமகவை பொறுத்தவரை அப்பா-மகன் இடையேயான மோதல் முடிவுற்று தற்போது தைலாபுரம் ரியூனியனை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆனால், பெரிய டாக்டர், சின்ன டாக்டர் சண்டையால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள், கட்சித் தொண்டர்கள் குழம்பிப் போய் உள்ளதாகவும், அன்புமணி மீது ராமதாஸ் ஆதரவாளர்கள், ராமதாஸ் மீது அன்புமணி ஆதரவாளர்களும் மாறி மாறி குற்றஞ்சாடி வருவதாகவும் பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பெரிய டாக்டரே நிறுவனராகவும், சின்ன டாக்டர் தலைவராகவும் செயல்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
இத்தகையச் சூழலில், முன்னாள் பாமக எம்.எல்.ஏ அருள், அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும், வன்னியர் மக்களை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டுள்ள அன்புமணியை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ” எப்போதும் எனக்கு ராமதாஸ்தான் கடவுள். அரசியல் துறவறம் பூண்டுவிட்டேன் என ராமதாஸ் தெரிவித்துவிட்டார். அடுத்து அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொள்ள கூடாது என ஐயா பாமகவினர் சொல்லிவிட்டதால், அதை நாங்கள் ஏற்றுக் கொண்டுவிட்டோம். அன்புமணி ஒரு நடிகர். அம்மாவை அடித்தவர் என ராமதாஸே சொல்லியுள்ளார். அப்பாவும் மகனும் இணைந்ததை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் ஐயா பாமகவினர், அன்புமணியை ஏற்கமாட்டோம். புதிய கட்சியா, வேறு கட்சியில் இணைவதா என்பது குறித்து விரைவில் முடிவு எடுப்போம். நாங்கள் வேறு கட்சிக்கே சென்றாலும், ராமதாஸ் தான் எங்களுக்கு கடவுள். அதிமுக, திமுகவில் சேரும்படி அழைப்புகள் வந்தது. எங்களுக்கு பல கட்சிகளில் இருந்தும் அழைப்பு வந்திருக்கிறது. ஆனால், வாழ்க்கை முழுவதும் அண்ணன் அன்புமணியை தலைவராக ஏற்றுக் கொள்ள வாய்ப்பே இல்லை. தமிழகம் முழுவதும் கருத்து கேட்கும் கூட்டம் நடத்த இருக்கிறோம். பின்னர் இது குறித்து முடிவு செய்யப்படும்” என்று பாமக முன்னாள் எம்.எல்.ஏ அருள் தெரிவித்துள்ளார்.
பாமக அருளின் இந்த கருத்து தைலாபுரத்தில் உள்ள பெரிய டாக்டருக்கும் சென்றதாம், ஆனால் அவர் அருளை அழைத்து எந்தவித ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்றும், இனி கட்சியை மகனிடமே கொடுத்துவிட்டு வீட்டிலேயே இருக்கலாம் என்று பெரிய டாக்டர் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெரிய டாக்டரின் இந்த முடிவை ஏற்காத அருள், விரைவிலேயே தன்னுடைய ஆதரவாளர்களுடன் பிற கட்சியில் இணையலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


