அவர் பேசுகையில், “கொரோனா லாக்டவுன் காலத்தில் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருந்தபோதுதான் என் வாழ்க்கையைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். என் வாழ்க்கையின் 30 ஆண்டுகள் ஓடி மறைந்திருந்தன.
ஒரு வேலையின் மீது தீவிரமான ஈடுபாட்டோடு உழைப்பது தவறு கிடையாது. ஆனால், அதையே 30 வருடங்களாகத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால்? அந்த உழைப்பினால் என் உறவுகளை நான் இழந்துவிட்டேன்.
என் குழந்தைகள் என் கண்ணெதிரே வளர்ந்து பெரியவர்களாகிவிட்டார்கள். அவர்களுடன் செலவிட வேண்டிய பொன்னான நேரத்தை நான் இழந்துவிட்டேன் என்ற ஏக்கம் என்னை உலுக்கியது.
நல்லவேளையாக இந்த எண்ணம் எனக்கு 86 வயதில் வராமல், 56 வயதிலேயே வந்தது சந்தோஷம். 86 வயதில் தோன்றியிருந்தால் எதையுமே மாற்றியிருக்க முடியாது. அதனால் கடந்த 4 ஆண்டுகளாகவே எனது குடும்பத்தினருடனும், நெருங்கிய நண்பர்களுடனும் அதிக நேரத்தைச் செலவழித்து வருகிறேன்.
1988-ல் ‘கயாமத் சே கயாமத் தக்’ படம் மாபெரும் ஹிட் அடித்ததும், அடுத்த 6 மாதங்களில் 9 படங்களில் கையெழுத்திட்டேன். ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய பிறகுதான் நான் செய்த தப்பு புரிந்தது.
வீட்டிற்கு வந்து என் முன்னாள் மனைவி ரீனாவிடம் அழுது புலம்புவேன். அடுத்தடுத்து அந்தப் படங்கள் தோல்வியடைய, ‘ஒரே ஒரு படம் ஹிட் கொடுத்தவர்’ என என்னை முத்திரையிட்டார்கள்” எனப் பேசியிருக்கிறார்.