கடந்த 11-ம் தேதி, பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடந்த அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவும் முற்றுகையிட்டது.
ஆனால், தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு பாசிட்டிவான விஷயத்தைப் பகிர்ந்துள்ளார்.
“தி நியூயார்க் போஸ்ட்’ பத்திரிகை நேர்காணலில், “அமெரிக்க பத்திரிகையாளர்கள் மீண்டும் நாடு திரும்பவேண்டாம். இஸ்லாமாபாத்திலேயே இருங்கள். அடுத்த இரண்டு நாள்களில் மிகப்பெரிய விஷயம் நடக்கலாம். அதற்காக, நாம் மீண்டும் அங்கே போவதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்று கூறியுள்ளார்.
அதாவது, அமெரிக்கா மற்றும் ஈரான் பேச்சுவார்த்தை மீண்டும் இஸ்லாமாபாத்தில் நடக்கலாம் என்பதற்கான குறிப்பு தான் ட்ரம்பின் இந்தப் பேச்சு.

அடுத்த செவ்வாய்க்கிழமையோடு (ஏப்ரல் 21), அமெரிக்கா, ஈரான் தற்காலிக போர் நிறுத்தம் முடிகிறது. அதற்குள் இரு நாடுகளும் சுமுகமான முடிவை எட்ட நினைக்கிறது.
போர் நிறுத்தம் அறிவித்த பின்னும், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் தான் ஈரான் தரப்பை மீண்டும் கோபமடையச் செய்தது. இதனால், மீண்டும் ஈரானின் தாக்குதல் தொடரலாம் என்கிற நிலை ஏற்பட்டது.
இந்தச் சூழலைச் சமாளிக்க, அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையில் நேற்று அமெரிக்காவில் இஸ்ரேல் – லெபனான் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.