இந்தத் தேர்தலில் பணம் கொடுத்து வெற்றிபெற முடியாது என்பது தெளிவாகிவிட்டது. ஒன்றிய கவுன்சிலருக்கு ரூ.5 லட்சம், கவுன்சிலருக்கு ரூ.10 லட்சம், மாவட்ட கவுன்சிலர் ஆக ரூ.25 லட்சம், சேர்மன் ஆக ரூ.1 கோடி, எம்.எல்.ஏ ஆக ரூ.10 கோடி, எம்.பி ஆக ரூ.25 கோடி என்ற ரேட் டேக் எல்லாம் இனி யாராலும் கொண்டுவரமுடியாது. எனவே, உழைப்போருக்கு மட்டுமே பதவி என்ற சூழல் உருவாகியிருக்கிறது.
நமது அடுத்த இலக்கு ராகுல் காந்தியைப் பிரதமராக்குவதுதான். நீட் விலக்கு, காவிரி நதி நீர் வரத்து, மீனவர் பாதுகாப்பு, தமிழ்நாட்டுக்கான நிதி விடுவிப்பு, மாநிலக் கடன் சுமையில் மத்திய அரசின் பங்கீடு என இதெல்லாம் செய்வதற்கு ராகுல் காந்தி பிரதமராக வேண்டும்.
த.வெ.க கூட்டணி என்பது நமக்கு மரியாதையான கூட்டணி. எனவே, அதைக் கட்டிக்காக்க வேண்டும். அவர்களும் அப்படியே இருப்பார்கள் என நம்புகிறோம். இரண்டு அமைச்சர்களும் வாரத்தில் ஒருநாள் கட்சி அலுவலகத்துக்கு வந்து தொண்டர்களைச் சந்திக்க வேண்டும். உங்களை மலைபோல் நம்பியிருக்கிறோம். கிரிஷ் சோடங்கர் மிகத் தெளிவாக காங்கிரஸின் உயர்வை மட்டுமே மையமாக வைத்துச் செயலாற்றியிருக்கிறார். அவரை மறந்துவிட முடியாது.
எடப்பாடி பழனிசாமிக்கு ஓட்டுக்கு எவ்வளவு காசு கொடுக்கலாம் எனத் திட்டமிடத்தான் தெரிகிறதே தவிர, மக்களுக்காகப் பேசியதில்லையே. எனவே, அரசியல் மாறுகிறது. அதனால் நாம் எல்லோரும் சேர்ந்து புதிய பலத்தைக் கொண்டுவருவோம். நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40-ம் காங்கிரஸுக்குக் கொண்டுவருவோம்.” என்றார்.