பள்ளிகளில் ஆய்வு செய்வது தவறில்லை. ஆனால், ஒரு மாணவியின் தன்னம்பிக்கையை சீர்குலைப்பது போல பேசியதும், ‘ஆங்கிலம் தெரியவில்லை என்றால் எதற்குமே லாயக்கில்லை’ என்ற உடல்மொழியை வெளிக்காட்டியதும்தான் கீர்த்தனாவை சர்ச்சை சுழலுக்குள் இழுத்திருக்கிறது.
ஆனால், அது புரிந்தும் புரியாதவர் போல, ‘நானே ஒரு அரசுப் பள்ளி மாணவி. தமிழ்வழி கல்வியில் படித்தவள். நான் அப்படி நடந்துக்கொள்வேனா..’ என்று, சிறுவயதில் தான் பரிசு பெறும் ஒரு படத்தோடு விளக்கமளித்திருக்கிறார் அமைச்சர் கீர்த்தனா. அதுவும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
அதாவது, ‘கீர்த்தனா படித்தது அரசுப் பள்ளி அல்ல. விருதுநகரிலுள்ள மாங்கா மச்சி அரசு உதவி பெறும் பள்ளி. வித்யாஸாலா பள்ளிகள் குழுமத்தின் கீழ் அந்த பள்ளி இயங்குகிறது…’ என்று ஆதாரங்களை எடுத்துப்போட்டு நெட்டிசன்கள் கீர்த்தனாவை வறுத்தெடுக்கிறார்கள்.

அதோடு, ‘கல்வித்துறைக்கென அமைச்சர் ராஜ்மோகன் இருக்கும்போது, அந்த துறையிலுள்ள பிரச்னைகளை கீர்த்தனா ஏன் ஆய்வு செய்கிறார்… முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு ஏன் இவர் பதில் சொல்கிறார்… இதேபோல, தொழில் நிறுவனங்களில் ராஜ்மோகனோ, லோகேஷ் தமிழ்செல்வனோ ஆய்வு செய்து, தொழில்துறை அதிகாரிகளை கடிந்துகொண்டால், கீர்த்தனா ஏற்றுக் கொள்வாரா…’ என்ற கேள்விகளும் சமூல வலைதளங்களில் எழுகின்றன.
மற்ற அமைச்சர்களின் துறைகளில் தலையிடுவதும், அதீத ரீல்ஸ் மோகத்தில் இருப்பதும் கீர்த்தனாவின் பொறுப்பற்ற செயலையே காட்டுகிறது. முதல்வரும் இதை துளியும் ரசிக்கவில்லை” என்றனர்.
“தனது செயல்பாடுகளை கீர்த்தனா மாற்றிக்கொள்ளவில்லை என்றால், இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில், அவர் பதவி இழக்க நேரிடும்” என்கிறார்கள் விவரமறிந்த த.வெ.க சீனியர்கள்.
அமைச்சர்களின் ஒவ்வொரு அசைவையும் முதல்வர் கவனித்து வருகிறார் என்பதைப் புரிந்துகொண்டு, இனியாவது தொழில்துறை வளர்ச்சியில் அமைச்சர் கீர்த்தனா கவனம் செலுத்த வேண்டும். ஆடிய பாதமும், பாடிய வாயும் சும்மா இருக்குமா என்பது போக போக தெரியும்.!