ஞான குரு, மௌன குரு என்றெல்லாம் போற்றப்படும் தட்சிணாமூர்த்தியை, சிவாலய கோஷ்டங்களில் தரிசித் திருப்பீர்கள். சுவாமிக்கும் அம்பாளுக்கும் இடையே தனிச்சன்னதியில் அவர் அருள்வதை தரிசித்தது உண்டா?
அப்படி ஓர் அபூர்வமான திருவினராக தட்சிணாமூர்த்தி அருளும் தலம். ஓமாம்புலியூர், பொதுவாக சிவாலயங்களில் வில்வம் தலவிருட்சமாக இருக்கும். இங்கே அபூர்வமாக இலந்தை மரம் தலவிருட்சமாக உள்ளது. பூங்கொடி அம்மை சமேதராக இங்கே அருளும் இறைவனின் திருப்பெயர், துயர்தீர்த்த நாதர். துன்பம் என்பது தாற்காலிகமாக வாட்டுவது. துயரம் என்பது காலங்காலமாக நம்மை வருந்தச் செய்வது. அத்தகைய துயரத்தை நீக்கி அருள்பவர் என்பதை இத்தலத்து இறைவனின் திருப்பெயரே உணர்த்துகிறது. வடமொழியில் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் (ஓமாம்புலி ஈஸ்வரர்), புஷ்பலதாம்பிகை என்பன இறைவன், இறைவியின் திருநாமங்கள்.
அப்பர் மற்றும் நாவுக்கரசரால் பாடப்பெற்ற தலம் இது. இங்குதான், மூலவரான துயர் தீர்த்த நாதர் சந்நதிக்கும், அம்பாளான பூங்கொடியம்மை சந்நதிக்கும் நடுவே கருவறையில் தனிச்சந்நதி கொண்டு விளங்குகிறார், தட்சிணாமூர்த்தி இந்த தட்சிணாமூர்த்தி அதீத சக்தி வாய்ந்தவர் என்று கூறுகிறது தலபுராணம் காரணம், அம்பாளுக்கே முக்தி பஞ்சாட்சர – மந்திரத்தை அருளியவர் இவர் என்பதுதான்.
இத்தலத்தில் ஒருசமயம், பூங்கொடி அம்மைக்கு முக்தி பஞ்சாட்சர மந்திரத்தை ஈசன் அருட்குருவான தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து உபதேசித்துக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் முருகப் பெருமான் தாயைப் பார்க்க வந்தார் வாசலில் நின்ற நந்திதேவர், “உள்ளே அம்பிகைக்கு குருவின் உபதேசம் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது நீங்கள் உள்ளே போகக்கூடாது” என்று தடுத்தார்.
உடனே முருகன் வண்டாக வடிவமெடுத்து அம்பாள் தீர்த்த அபிஷேக நீர் வெளியே வரும் பாதை வழியாக உள்ளே நுழைந்தார். அம்பிகையின் கூந்தலில் இருந்த மலரில் அமர்ந்து, குருவானவர் அம்பாளுக்குச் செய்த உபதேசத்தை ஒட்டுக் கேட்டார். குருவாகிய தட்சிணாமூர்த்தி ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை அம்பாளுக்கு உபதேசித்தார். எனவே, ‘ஓமாம்’ என்று இத்தலத்தின் பெயர் துவங்குகிறது. ஆகமவிதிப்படி, பிராகாரம் சுற்றி வரும் போது எல்லாக் கோயில்களிலும் காணப்படுவது போன்று இந்தக் கோயிலிலும், கோஷ்டத்தில் ஒரு தட்சிணாமூர்த்தி இருக்கிறார்.
இத்தலம் ஆரம்பத்தில் இலந்தை மரக் காடாக இருந்தது. காட்டுக்குள் சென்ற வேடன் ஒருவன், புலி துரத்தியதால் அஞ்சி வில்வமரம் ஒன்றில் ஏறினான். இரவு முழுக்க பயத்தில் தூங்காமல் மரத்தின் இலைகளைப் பிய்த்துக் கீழே போட்டபடி அமர்ந்திருந்தான். மரத்தின் கீழ் சிவலிங்கம் ஒன்றிருந்தது. அன்றைய தினம் மகாசிவராத்திரி என்பதால், சிவபூஜை செய்ததன் பலனாக வேடனுக்கும் அதற்குக் காரணமான புலிக்கும் முக்தியளித்தார் ஈசன். புலி துரத்தியதால் புலியூர் என்ற பெயரையும் சேர்த்து ஓமாம்புலியூர் என்று தலத்தின் பெயர் குறிப்பிடப்படுகிறது. தில்லைத் திருத்தலத்தில் நடராஜப் பெருமானை பூஜித்து வந்த புலியின் கால்களையும் மனித உடலையும் கொண்ட வியாக்ரபாதர் என்ற முனிவர் இந்தத் தலம் வந்து இங்குள்ள துயர் தீர்த்த நாதரைப் பூஜித்த பெருமை உண்டு.
கொள்ளிடத்தின் கரையில் உள்ள பாப்பாக்குடி எனும் தலத்தை ஒருகாலத்தில் ஆட்சி செய்த மன்னனுக்கு விதிவசத்தினால் பெருநோய் பீடித்தது. அதனால் வருந்திய மன்னன் இத்தலம் வந்து வேண்டியபோது, கோயிலுக்கு அருகே உள்ள வரம்தரும் குட்டையில் குளி!” என்று அசரீரி கேட்க, அப்படியே செய்த அரசனின் நோய் நீங்கியதாம். அந்தக் குட்டை இன்றும் இருக்கிறது. பக்தனின் துயரத்தினைத் தீர்த்ததால் இறைவனுக்கு துயரம் தீர்த்த நாதர் என்ற திருப்பெயரும் வந்தது.
சிதம்பரத்திலிருந்து தூரத்தில், காட்டும் வழியில் உள்ளது ஈசனை எண்ணி அம்பிகை இலந்தை மரத்தடியில் தவம் செய்ததால், இங்கே தலவிருட்சம் இலந்தை, தலவிருட்சத்தின் கீழ், அம்பாளின் தவக்கோல சிலை உள்ளது. சனி பகவான் தனி சன்னதியில் இருக்கிறார். நவகிரஹ சன்னதி இல்லை குலோத்துங்க சோழன் இந்த ஆலயத்துக்குத் திருப்பணி செய்ததாகக் கல்வெட்டு உள்ளது. வேடன் புலிக்குப் பயந்து ஏறிய வில்வ மரம் பிராகாரத்தில் உள்ளது.
அம்பிகை தவக்கோலம் கொண்டிருப்பதால், 10 நாள் உற்சவம் இங்கு கிடையாது. கொடிமரம் இல்லை. பள்ளியறை கிடையாது. இது யோகநிலைக் காட்சி!
மாசி மகம் இங்கு விசேஷம் பஞ்ச மூர்த்திகள் புறப்பட்டு ஒரு பர்லாங்கு தூரத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி நடக்கும்
பிராகாரத்தில் நர்த்தன விநாயகர், சிவகாமசுந்தரி சமேத நடராஜர், வலம்புரி விநாயகர், பத்ர லிங்கேஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜ லட்சுமி, சரஸ்வதி, பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், காலபைரவர், சமயக் குரவர் நால்வர். வியாக்ரபாத முனிவர் தரிசனம் கிடைக்கிறது.
அம்பிகைக்கு மந்திர உபதேசம் செய்தவர் என்பதால், இத்தலம் வந்து வணங்குவோர்க்கு ஞானமும் கல்வியும் சிறக்கும். நல்லவை நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

