அரபு கட்சிகள் கொடுத்த ட்விஸ்ட்.. கையை விட்டு போகும் பிரதமர் பதவி.. உச்சக்கட்ட டென்ஷனில் நெதன்யாகு | Israel Next Prime minister: Netanyahu Faces Setback as Arab Joint List Backs Gadi Eisenkot for PM

Spread the love

International

oi-Vigneshkumar

ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் சிக்கல் அதிகரித்துள்ளது. அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான ஆலோசனையில் யாஷர் கட்சி தலைவர் காடி ஐசென்காட்டுக்கு அரபு கட்சிகளை கொண்ட ஜாயின்ட் லிஸ்ட் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் மூலம் புதிய நாடாளுமன்றத்தில் 67 உறுப்பினர்களின் ஆதரவு ஐசென்காட்டுக்குக் கிடைத்துள்ளது.

இஸ்ரேல் நாட்டில் தேர்தல் முடிந்தாலும் யார் ஆட்சியை அமைப்பார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. 120 உறுப்பினர்களை கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 60 இடங்கள் தேவைப்படும் நிலையில், தேர்தலில் எந்த கட்சிக்கும் அது கிடைக்கவில்லை. இதற்கிடையே அந்த நம்பரை இப்போது காடி ஐசென்காட் எட்டியுள்ளார்.

Israel Netanyahu Middle east

இஸ்ரேல்

இஸ்ரேலில் நடைபெற்ற தேர்தலுக்கு பிறகு, அங்கு அடுத்த அரசை அமைப்பது யார் என்பதில் இழுபறி நீடிக்கிறது. இதற்காக அதிபர் ஐசக் ஹெர்சாக், கட்சிகளின் தலைவர்களை சந்தித்து யாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்று கேட்டு வருகிறார். இதில் நெதன்யாகுவை விட ஐசென்காட் அதிகமான கட்சிகளின் பரிந்துரைகளை பெற்றிருந்தார். தற்போது ஜாயின்ட் லிஸ்ட் கூட்டணியும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

அரபு கட்சி

அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள மூன்று பிரிவுகளும் ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளன. நெதன்யாகுவும் அவரது அரசும் மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க வேண்டும் என்ற பொதுமக்களின் விருப்பத்தின் அடிப்படையில் ஐசென்காட்டை ஆதரிப்பதாக கூட்டணி தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் அரபு மக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளையும், அரபு மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் தடுக்க எதிர்க்கட்சிகள் போதிய முனைப்பு காட்டவில்லை என்றும் அந்த கூட்டணி அதிருப்தி தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே அரபு கட்சியான யுனைடெட் அரபு லிஸ்ட் ஐசென்காட்டுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. இந்த கட்சி தேர்தலில் 8 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதன் ஆதரவும் சேர்க்கப்பட்டால், ஐசென்காட்டுக்கு ஆதரவாக 56 உறுப்பினர்கள் இருப்பார்கள். எனினும், ஆட்சி அமைக்க தேவையான 61 இடங்களை பெற இன்னும் ஐந்து இடங்கள் தேவை.

நெதன்யாகுவுக்கு பின்னடைவு

மற்றொரு பக்கம், நெதன்யாகு தலைமையிலான அணியில் இடம்பெற்றிருந்த யுனைடெட் தோரா யூதாயிசம் கட்சி, எந்த பிரதமர் வேட்பாளரையும் பரிந்துரைக்க போவதில்லை என்று அறிவித்துள்ளது. இதுவும் நெதன்யாகுவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

கட்சிகளுடனான ஆலோசனைகளை முடித்து நவம்பர் 11ஆம் தேதிக்குள் ஒருவருக்கு ஆட்சி அமைக்க அதிபர் ஹெர்சாக் அழைப்பு விடுக்க வேண்டும். அதேநேரம் அதிக ஆதரவு பரிந்துரைகளை பெற்றவருக்குத்தான் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கட்டாயம் அதிபருக்கு இல்லை. எனவே, அதிபர் யாரை வேண்டும் என்றாலும் அழைக்கலாம். அதேநேரம் ஆட்சி அமைக்க அழைக்கப்படும் வேட்பாளருக்கு 28 நாட்கள் அவகாசம் கிடைக்கும். தேவைப்பட்டால் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்படும். அதற்குள் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

முக்கியம்

இங்கு முக்கியமான விஷயம் ஐசென்காட்டுக்கு 67 எம்பிக்களின் பரிந்துரை கிடைத்திருந்தாலும், அந்த கட்சிகள் அனைத்தும் அவரது அரசில் பங்கேற்பதாக உறுதி அளிக்கவில்லை. குறிப்பாக ஐசென்காட்டை ஆதரித்த யிஸ்ரேல் பெய்டெய்னு கட்சி, அரபு கட்சிகளின் ஆதரவை நம்பியிருக்கும் அரசில் இடம்பெற மாட்டோம் என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளது. எனவே அடுத்த பிரதமர் யார் என்பது மட்டுமின்றி, யாரால் நிலையான கூட்டணியை அமைக்க முடியும் என்பதும் இஸ்ரேல் அரசியலில் இப்போது முக்கிய கேள்வியாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *