நமது சமூகத்தில் அரிதான நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தினார்.
நாராயணா நேத்ராலயா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், “இந்தியா போன்ற 4,600 க்கும் மேற்பட்ட வேறுபட்ட மக்கள் குழுக்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட ஒரு நாட்டில், பெரும்பாலும் குறிப்பிட்ட சமூகம், குடும்பத்தினருக்குள்ளேயே திருமணங்கள் நடந்துவரும் நிலையில், நாம் அரிய வகை நோய்களில் அதிக பாதிப்பை எதிர்கொள்கிறோம்.
துரதிர்ஷ்டவசமாக, இந்த நோய்களுக்கான சிகிச்சைகள் இந்தியாவிலும், நடுத்தர வருமானம் கொண்ட பிற நாடுகளிலும் பெரும்பாலும் கிடைப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும்” என்று அவர் கூறினார்.
கடந்த ஏப்ரலில் ஜனாதிபதி திரௌபதி முர்முவால் தொடங்கப்பட்ட புற்றுநோய்க்கான நாட்டின் முதல் வீட்டுமுறை மரபணு சிகிச்சையைப் பற்றிக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, இதில் குறிப்பிடத்தக்க செல் சிகிச்சையானது அதன் செலவுகள் காரணமாக பெரும்பாலும் உலகளவில் அணுக முடியாததாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
மார்ச் 2021 ஆம் ஆண்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட அரியவகை நோய்களுக்கான தேசிய கொள்கையை மேற்கோள் காட்டிப் பேசிய சந்திரசூட், அரிதான நோய்களின் வரையறைகள் குறித்து தெரிந்துகொள்ள ஆராய்ச்சிகள் அவசியம் என்றும், இந்தியா போன்ற தேசத்தில் மரபணு சிகிச்சை போன்ற மேம்பட்ட மருத்துவ சிகிச்சைகளை மக்களுக்கு உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
“சுகாதார அமைப்புக்கு வெளியே உள்ள பிற காரணிகளான வர்க்கம், சாதி, பாலினம் மற்றும் இருப்பிடம் ஆகியவை ஒரு தனிநபரின் உடல்நிலையை நிர்ணயிப்பதில் பெரும்பாலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தனிநபர்களை நோய் அறிகுறிகள் எனும் லென்ஸ் மூலம் மட்டுமே பார்க்காமல், அவர்களின் ஆரோக்கியத்தில் சமூக நிலை ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து புரிந்துகொள்ளவேண்டும்” என்று குறிப்பிட்டார்.
மேலும், “சமீபத்தில், அரிதான நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தாக்கல் செய்த மனுக்களில், மருந்துகள் மற்றும் அரிய நோய்களுக்கான சிகிச்சைகள் மீது சுங்க வரி மற்றும் கட்டணங்கள் விதிக்கப்படக் கூடாது என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
இந்த நடவடிக்கைகள் மூலம் அத்தியாவசிய சிகிச்சைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கான நமது முயற்சிகளின் முன்னேற்றத்தைக் குறிப்பிடுகின்றன. ஆனால், இந்த சவால்களை எதிர்கொள்ள, நமது மக்கள்தொகைக்கு ஏற்றவாறு உள்நாட்டு தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மலிவான முறையில் சிகிச்சைகளை உருவாக்கப் புதுமைகளை அரசாங்கம் ஊக்குவிக்கவேண்டும். மரபணு சிகிச்சை மற்றும் அரிதான நோய்களுக்கான சிகிச்சையின் முன்னேற்றத்திற்கு பல வகையிலும் ஆதரவுகள் தேவைப்படுகின்றன” என்று சந்திரசூட் தெரிவித்தார்.