தவெக அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து மின்வெட்டு சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன என்கிற குற்றச்சாட்டு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக தினம் ஒரு செய்தி வந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “தமிழ் நாட்டில் கோடை வெயிலுடன் அறிவிக்கப்படாத மின் தடையும் அதிகரித்துள்ள நிலையில், மின் தேவை வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. அறிவிக்கப்படாத மின் வெட்டால் வீடுகள், சிறு தொழில்கள், விவசாயம், மாணவர்களின் படிப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எதிர்காலத் தேவைக்கேற்ப உற்பத்தி, கொள்முதல் மற்றும் உட்கட்டமைப்பு திட்டமிடல் போதுமானதாக இல்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. மாவட்ட வாரியாக தரவுகள் வெளியிடுதல், நீண்டகால திட்டங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் வலியுறுத்துகின்றனர்.

“மின்சாரம் போனது… இன்னும் வரவில்லை …”
கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல நகரங்கள், கிராமங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மக்கள் அதிகமாக உச்சரிக்கும் வாக்கியம் இதுதான்.
ஒரு பக்கம் 40 டிகிரியைத் தாண்டும் வெயில்; மறுபக்கம் அறிவிக்கப்படாத மின்தடை. இதனால் வீடுகள், சிறு தொழில்கள், விவசாயம், மாணவர்களின் படிப்பு என அனைத்தும் பாதிக்கப்படுவதாக மக்கள் புலம்புகின்றனர்.
தமிழகத்தின் மின் தேவை 2026-27ஆம் ஆண்டில் 23,013 மெகாவாட் வரை செல்லும் என்று மத்திய மின்சார ஆணையத்தின் கணிப்பு தெரிவிக்கிறது.