மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர், தன்னுடைய கணவரிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கு கூறியிருக்கும் காரணம், அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரைச் சேர்ந்த ஒரு பெண், 1998-ம் ஆண்டு மார்க்கெட்டிங் கம்பெனியில் பணியாற்றும் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். மார்க்கெட்டிங் பணி என்பதால் அடிக்கடி அப்பெண்ணின் கணவர் வெளியூர் செல்வது வழக்கம். இதனால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 2015ம் ஆண்டில் இருந்து இரண்டு பேரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். அப்பெண் எப்படியாவது தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற முடிவு செய்தார்.

ஆனால் கணவர் விவாகரத்து கொடுக்க மறுத்து வந்தார். இதையடுத்து 2021ம் ஆண்டு தனது கணவருக்கு இரண்டாவது திருமணம் நடந்துவிட்டது என்று கூறி குடும்ப நல நீதிமன்றத்தில் தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரி அப்பெண் மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனுவில் தனது கணவருக்கு திருமணமாகிவிட்டது என்பதற்கு குடும்ப புகைப்படம் ஒன்றை சாட்சியாக தாக்கல் செய்து இருந்தார். அப்படத்தில் அப்பெண்ணின் கணவர் அருகில், கணவரின் சகோதரி நின்று கொண்டிருந்தார். ஆனால், தன் கணவரின் சகோதரிதான் இரண்டாவது மனைவி எனக் கூறி, தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
அந்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அப்பெண்ணின் கணவரிடம் விளக்கம் கேட்காமல், விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில்தான் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது, கணவருக்குத் தெரியவந்திருக்கிறது. உடனே குடும்ப நீதிமன்றத்தில் விசாரித்த போதுதான் அப்பெண் தனது கணவரின் சகோதரியையே கணவரின் இரண்டாவது மனைவி என்று கூறி விவாகரத்து பெற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அப்பெண்ணின் கணவர் விவாகரத்தை எதிர்த்து குவாலியர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருக்கிறார். அதில் நீதிமன்றத்தில் தவறான தகவல் கொடுத்து தனது மனைவி விவாகரத்து பெற்று இருப்பதாகவும், எனவே விவாகரத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இம்மனுவை நீஎதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.