சிறு வயதிலிருந்தே விளையாட்டில் இருந்த ஆர்வம் தொடர்ந்த அதே நேரத்தில், படிப்பிலும் பரணிகா கவனம் செலுத்தியுள்ளார். 12-ம் வகுப்பில் 1,163 மதிப்பெண்கள் பெற்ற அவர், சென்னை எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்துள்ளார். கல்லூரியில் படிக்கும்போதுதான் போல் வால்ட் விளையாட்டில் தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

ஆனால், அவரது விளையாட்டுப் பயணத்தில் ஒரு கட்டத்தில் பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது. சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போல் வால்ட் பயிற்சியின்போது போல் கம்பி உடைந்து, காலில் காயம் ஏற்பட்டுள்ளது. “இனி என் வாழ்க்கை அவ்வளவுதான்” என்று அவர் அழுததாக பெற்றோர் கூறுகின்றனர். ஆனால், மருத்துவர்கள் அளித்த நம்பிக்கையும், குடும்பத்தின் ஆதரவும் அவரை மீண்டும் பயிற்சிக்குத் திரும்ப வைத்துள்ளது. இரண்டு, மூன்று ஆண்டுகள் போராடி மீண்டும் களத்துக்குத் திரும்பியுள்ளார்.

காயத்திலிருந்து மீண்டு மீண்டும் பயிற்சியில் கவனம் செலுத்திய பரணிகா, தற்போது ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார். அதே நேரத்தில், ஒடிசாவில் அனில் அம்பானியால் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையத்தில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகளுடன் பரணிகா பயிற்சி பெற்று வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
போல் வால்ட்டுக்கான போல் கம்பிகள் வெளிநாட்டிலிருந்து வாங்கப்படுவதாகவும், ஒரு கம்பியின் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்றும் அவரது பெற்றோர் கூறுகின்றனர். இதுவரை பயிற்சிக்குத் தேவையான கம்பிகளை குடும்பத்தினரே சொந்த செலவில் வாங்கி வந்துள்ளனர். தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் பரணிகாவுக்கு, பயிற்சிக்குத் தேவையான போல் கம்பிகளை அரசு அல்லது சம்பந்தப்பட்ட அமைப்புகள் வழங்கினால் உதவியாக இருக்கும் என்பதே அவரது குடும்பத்தினரின் கோரிக்கையாக உள்ளது.