International
oi-Shyamsundar I
டோக்கியோ: ஜப்பானின் ஐச்சி-நாகோயாவில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தொடர்ச்சியாகப் பதக்கங்களை வென்று குவித்து வருகின்றனர். தடகளம், கிரிக்கெட், ஸ்குவாஷ், பேட்மிண்டன் எனப் பல்வேறு விளையாட்டுகளில் தமிழக வீரர்கள் தங்களின் தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளனர்.
இந்தத் தொடர் வெற்றிகளுக்குப் பின்னால் வீரர்களின் கடுமையான உழைப்பு மட்டுமல்லாமல், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் முன்னெடுத்த தொலைநோக்குத் திட்டங்களும் கட்டமைப்பு வசதிகளுமே முக்கியக் காரணமாக அமைந்துள்ளன என்பது விளையாட்டு ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டின் நட்சத்திரங்கள்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டின் கொடியை உலக அரங்கில் உயர்த்திய முக்கியப் பதக்க வெற்றியாளர்கள்:
ஜி. கமலினி (தங்கப் பதக்கம் – மகளிர் கிரிக்கெட்):
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று அபாரமாக ஆடிய தமிழக வீராங்கனை கமலினி, இறுதிப் போட்டியில் அணி தங்கம் வெல்ல மிக முக்கியத் தூணாக விளங்கினார்.
விஷால் டி.கே (வெள்ளிப் பதக்கம் – 4×400 மீ கலப்பு தொடர் ஓட்டம்):
தடகளத்தில் கலப்பு தொடர் ஓட்டப் பிரிவில் பங்கேற்ற விஷால், தொடக்கம் முதலே சிறப்பான வேகத்தை வெளிப்படுத்தி இந்திய அணி 3:14.46 நிமிடங்களில் வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்த உதவினார்.
வித்யா ராம்ராஜ் (இரட்டைப் பதக்கம் – வெள்ளி மற்றும் வெண்கலம்):
கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் கடைசி சுற்றில் அசுர வேகத்தில் ஓடி அணிக்கு வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். அத்துடன் நில்லாமல், மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 54.75 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தையும் தன்வசமாக்கினார்.
அபய் சிங் (வெள்ளிப் பதக்கம் – ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவு):
ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் மலேசியாவின் முன்னணி வீரருக்கு எதிராக மிகக் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப் போட்டி வரை சென்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பரணிகா இளங்கோவன் (வெண்கலப் பதக்கம் – மகளிர் போல் வால்ட்):
கம்பூன்றித் தாண்டும் ‘போல் வால்ட்’ மகளிர் பிரிவில் பலத்த போட்டிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலப் பதக்கத்தைத் தமிழ்நாட்டிற்குப் பெற்றுத் தந்தார்.
ஹரிஹரன் அம்சகருணன் (வெண்கலப் பதக்கம் – பேட்மிண்டன் ஆடவர் அணி):
ஆடவர் அணிகள் பிரிவில் களமிறங்கிய இந்திய பேட்மிண்டன் அணியில் உறுதுணையாக விளையாடி வெண்கலப் பதக்கம் வெல்ல உதவினார்.
முன்னாள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பங்கு என்ன?
விளையாட்டுத் துறையில் தமிழக வீரர்கள் இன்று உலக அளவில் முத்திரை பதிப்பதற்கு, கடந்த திமுக ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்த உதயநிதி ஸ்டாலின் வகுத்த திட்டங்கள் மிகப்பெரிய அடித்தளமாக அமைந்தன.
கிராமப்புற மற்றும் எளிய பின்னணியில் இருந்து வரும் திறமையான வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான நவீனப் பயிற்சி வசதிகளையும் நிதி உதவியையும் அரசு சார்பில் தாராளமாக வழங்கினார். குறிப்பாக:
1. ‘எலைட்’ மற்றும் ‘மிஷன் ஒலிம்பிக்’ திட்டங்கள்: சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லக்கூடிய திறன் படைத்த வீரர்களுக்கு ஆண்டிற்கு தலா ₹30 லட்சம் வரை உதவித்தொகை வழங்கி, உலகத்தரம் வாய்ந்த வெளிநாட்டுப் பயிற்சிகளுக்கு அனுப்பும் முறையைத் தீவிரப்படுத்தினார். இன்று பதக்கம் வென்றுள்ள வித்யா ராம்ராஜ், விஷால் உள்ளிட்டோர் இத்திட்டத்தின் மூலம் நேரடியாகப் பயனடைந்தவர்கள் ஆவர்.
2. சர்வதேச தரத்திலான மைதானங்கள்: சென்னை மட்டுமின்றி மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நவீன சிந்தெடிக் தடகள ஓடுதளங்கள், சர்வதேச தரத்திலான ஸ்குவாஷ் மற்றும் பேட்மிண்டன் உள்விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டன.
3. நவீன உடற்பயிற்சி மற்றும் மருத்துவ வசதிகள்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மூலமாக உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு அறிவியல் மையங்கள் (Sports Science Centres) நிறுவப்பட்டு, வீரர்களுக்குத் தேவையான பிசியோதெரபி, ஊட்டச்சத்து மற்றும் உளவியல் ஆலோசனைகள் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.
4. உடனடி ஊக்கத்தொகை மற்றும் வேலைவாய்ப்பு: தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு உடனடியாக உயரிய ஊக்கத்தொகைகளும், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புகளும் வழங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரக் கவலைகள் தீர்க்கப்பட்டன.
விதைத்த திட்டங்கள் தந்த அறுவடை
சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவுக்காக ஒரு பதக்கம் வெல்வது என்பது பல ஆண்டுகால தொடர் முயற்சி. கடந்த ஆட்சியில் விளையாட்டுத் துறைக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும், வீரர்களுக்குத் தயக்கமின்றி செய்து தரப்பட்ட அதிநவீன கட்டமைப்புகளுமே இன்று நாகோயா ஆசிய விளையாட்டு களத்தில் பதக்க மழையாகப் பொழிந்து கொண்டிருக்கிறது.
அன்று உதயநிதி ஸ்டாலின் முன்னெடுத்த தீவிர விளையாட்டு வளர்ச்சித் திட்டங்கள் வீண் போகவில்லை என்பதை இந்தத் தமிழக வீரர்களின் வெற்றியும், அவர்களின் கழுத்தில் மின்னும் பதக்கங்களும் உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கின்றன.