ஆண்டுக்கு10000 கோடி லாபம் ஈட்டும் ஐடிபிஐ வங்கியை 53000 கோடிக்கு தனியாருக்கு மத்திய அரசு விற்பது ஏன்? | IDBI Bank generates a profit of 100,000 crore: Why is the government selling it for 53,000 crore?

Spread the love

Business

oi-Velmurugan P

டெல்லி: வருஷத்திற்கு 10000 கோடி லாபம் காட்டும் ஐடிபிஐ வங்கியை 53000 கோடிக்கு தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. அதேநேரம் மக்கள் பணத்தை LIC முதலீடாக வாங்கி அந்த பணத்தை LIC நிறுவனம் IDBI வங்கியில் முதலீடு செய்திருக்கிறது. அந்த வகையில் ஐடிபிஐ வங்கியில் எல்ஐசியின் பங்குகள் 19 சதவீதம் உள்ளது. இதேபோல் மத்திய அரசுக்கு 15 சதவீதம் பங்குகள் உள்ளன. ஐடிபிஐ வங்கியை லாபகரமாக மாற்றி இப்போ கனடா நிறுவனத்துக்கு கொடுத்துள்ள மத்திய அரசு, தன் வசம் உள்ள பங்குகளையும், எல்ஐசி வசம் உள்ள பங்குகளையும் விற்காமல் அப்படியே வைத்திருப்போம் என அறிவித்துள்ளது.

ஐடிபிஐ வங்கியை தனியாருக்கும் கொடுத்த பின்னரும் அதில் 15 சதவீத பங்குகளை அரசாங்கம் தொடர்ந்து வைத்திருக்கும். மேலும், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) 19 சதவீத பங்குகளைத் தொடர்ந்து வைத்திருக்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

IDBI Bank generates a profit of 100 000 crore Why is the government selling it for 53 000 crore

அக்டோபர் 14 அன்று வெளியிடப்பட்ட அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொகுப்பில், அரசாங்கமும் எல்ஐசி (LIC)-யும் ஐடிபிஐ வங்கியின் இயக்குநர் குழுவில் உள்ள தங்கள் பிரதிநிதிகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, பொதுப் பங்குதாரர்களாக மாறவுள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டிருக்கிறது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, சிறுபங்கு விற்பனைக்கான நடைமுறைகளைப் பின்பற்றி, அரசாங்கத்திடம் எஞ்சியுள்ள பங்குகளைத் திறந்த சந்தையில் விற்பனை செய்ய ‘மாற்று ஏற்பாட்டு அமைப்பிற்கு அனுமதி அளித்துள்ளது. அதேவேளையில், எல்ஐசி நிறுவனம் வங்கியிலுள்ள தனது எஞ்சிய பங்குகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை, அதன் உள் நடைமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு உட்பட்டு சுதந்திரமாக தீர்மானிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரம் கோடி லாபம் ஈட்டும் ஐடிபிஐ இப்போது விற்பது ஏன் என்று பலரும் கேட்கிறார்கள்.இதுபற்றி நெட்டிசன் ஒருவர் கூறுகையில், “சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஐடிபிஐ வங்கி வீழ்ச்சியின் விளிம்பிற்கே போய்விட்டது. வழங்கப்பட்ட ஒவ்வொரு 100 ரூபாய் கடனிலும், 32 ரூபாய் வாராக் கடனாக மாறியிருந்தது. 2019-ல், அந்த வங்கியின் மூன்று ஆண்டு கால இழப்பு 28,000 கோடி ரூபாயை எட்டியது. அப்போது இந்த வங்கியை யாருமே வாங்க முன்வரவில்லை.. இதனால் எல்ஐசி (LIC) மூலமாக அரசு 51 சதவீத பங்குகளை வாங்கியது. தற்போது, ​​வங்கியின் வாராக் கடன் அளவு ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் வெறும் 2 ரூபாயாகக் குறைந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ஈட்டிய லாபம் 22,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.

ஐடிபிஐ வங்கி, அரசின் ஒரு வெற்றிகரமான முன்னெடுப்பாகும். தற்போது, ​​அதன் பங்குகளை 53,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், மத்திய அரசும் எல்ஐசியும் இணைந்து இந்த வங்கியில் 46,000 கோடி ரூபாயை முதலீடு செய்தன. இதில் பெரும்பகுதி மக்களின் வரிப்பணத்திலிருந்தே வந்தது. பொதுவாக, நஷ்டத்தில் இயங்கும் வணிகங்களில் அரசு தொடர்ந்து பணத்தைச் செலுத்திக்கொண்டே இருக்கும், ஆனால் அதற்குப் பதிலாக எந்த லாபமும் கிடைக்காது. ஆனால் இங்கே, 61 சதவீத பங்குகள் 53,000 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன; மேலும், மீதமுள்ள பங்குகளின் மதிப்பு சுமார் 30,000 கோடி ரூபாயாக உள்ளது. இது பொதுமக்களின் பணத்தில் கிடைத்த லாபம் ஆகும்.

“லாபத்தில் இயங்கும்போது ஏன் விற்க வேண்டும்?” என்று கேட்பவர்கள், வீழ்ச்சியடைந்த அந்த வங்கி எவ்வாறு மீட்கப்பட்டது என்பதற்கான முழு வரலாற்றையும் படித்துப் பார்க்க வேண்டும். எவ்வாறாயினும், வணிகங்களை நடத்துவது அரசின் பணி அல்ல. ஹோட்டல்கள், விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை நடத்துவதற்குப் பதிலாக, கல்வி, சுகாதாரம், தூய்மையான காற்று மற்றும் குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும்” இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த நெட்டிசன் கூறியபடியே ஒரு காலத்தில் 100 ரூபாயில் 31 ரூபாய் வராக்கடன் என்கிற அதள பாதாளத்தில் இருந்த ஐடிபிஐ வங்கியை, ஆண்டுக்கு ₹9,513 கோடி லாபம் என்கிற நிலைக்கு மத்திய அரசு மீட்டெடுத்தது சாதாரணமானது அல்ல.. அசாத்தியமானது.. அதனை எப்படி செய்தது என்பதையும் பார்ப்போம். கடந்த 2020களில் வாராக்கடன் சுமையால் தத்தளித்த ஐடிபிஐ வங்கியை, மத்திய அரசு எல்ஐசி மற்றும் தன் சொந்த பங்கு மூலம் சுமார் 46000 கோடி ரூபாய் மூலதனம் செலுத்தி மீட்டெடுத்தது. தற்போது தனியார் முதலீட்டாளருக்கு விற்கும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.

2018-ல் ஐடிபிஐ வங்கியின் மொத்த வாராக்கடன் 31.78 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டது. வங்கியின் மூலதனப் போதுமான விகிதமும் 6.22 சதவீதமாகச் சரிந்துவிட்டது. இதனால் ரிசர்வ் வங்கியின் கடுமையான கண்காணிப்பின் கீழ் வங்கி கொண்டுவரப்பட்டிருந்தது. கிங்பிஷர் ஏர்லைன்ஸ், ஏபிஜி ஷிப்யார்டு, வின்சம் டைமண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பல ஆயிரம் கோடி கடன் திரும்ப வரவே இல்லை. இந்தச் சூழலில், 2010 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசு சுமார் ₹25,000 கோடி மூலதனத்தை வங்கியில் செலுத்தியது. வாராக்கடன்களைக் குறைத்து, வங்கியின் நிதிநிலையைச் சீரமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் விளைவாக, 2018 செப்டம்பரில் 31.78 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன், 2026 மார்ச்சில் 2.32 சதவீதமாகக் குறைந்தது. நிகர வாராக்கடன் 17.30 சதவீதத்திலிருந்து 0.15 சதவீதமாக குறைந்தது. மூலதனப் போதுமான விகிதமும் 26.65 சதவீதம் என்கிற அளவிற்கு உயர்ந்தது. இதையடுத்து, 2026 நிதியாண்டில் ஐடிபிஐ வங்கி ₹9,513 கோடி நிகர லாபத்தை ஐடிபிஐ வங்கி பதிவு செய்தது. வாராக்கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வங்கியை மீட்டெடுத்து, அதன் நிதிநிலையை மேம்படுத்திய மத்திய அரசு, சுமார் 60 சதவீதம் பங்குகளை கனடா நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. பொதுவாக பொதுப் பணத்தை முதலீடு செய்து ஒரு வங்கியை மீட்டெடுத்த பிறகு, அதன் கட்டுப்பாட்டைத் தனியார் முதலீட்டாளருக்கு மாற்றுவதால் அரசுக்கும் மக்களுக்கும் என்ன பயன் என்ற கேள்விகள் எழாமல் இல்லை. இந்த கேள்விகளை எதிர்க்கட்சியினர் தற்போது எழுப்பி வருகிறார்கள்.

பொதுமக்களுக்கு இதில் என்ன பாதிப்பு என்றால், எதுவுமே இல்லை. வங்கி தனியார் கைக்கு மாறினாலும் 5 லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட் இன்சூரன்ஸ் அப்படியேதான் இருக்கு இந்திய நிதித்துறையில் இதுவரை நடந்த மிகப்பெரிய எப்டிஐ இதுதான். நஷ்டத்தில் இருந்த ஒரு அரசு நிறுவனத்தை லாபகரமாக மாற்றி விற்பது புத்திசாலித்தனமா, இல்லை ஒரு பொதுத்துறை சொத்து கைவிட்டுப் போகிறதா என்பதுதான் தற்போது பெரிய விவாதமாக சமூக ஊடகங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *