ஆந்திர சிறுமிக்கு கேரள ஸ்பாக்களில் நடந்த கொடூரம்; பாலியல் தொழில் கும்பலிடம் விற்ற சித்தி கைது!

Spread the love

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தாய்-தந்தை இருவரும் உயிரிழந்ததைத் தொடர்ந்து தனது சித்தியின் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார். ஆனால், பணத்திற்கு ஆசைப்பட்டு ஆதரவற்ற அச்சிறுமியை பாலியல் நெட்வொர்க் கும்பலிடம் ஒப்படைத்துள்ளனர் அவரது சித்தியும் சித்தப்பாவும். முதலில் சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள ஸ்பா மையங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். பின்னர் கேரளாவுக்குக் கொண்டு சென்று பல்வேறு இடங்களில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். ​கேரள மாநிலம் கோவளத்தில் உள்ள ஸ்பா ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது, அங்கு வாடிக்கையாளராக வந்த ஒரு இளைஞருடன் அச்சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு நடக்கும் சித்ரவதைகளில் இருந்து தப்பிக்க எண்ணிய சிறுமி, அந்த இளைஞரின் உதவியுடன் அங்கிருந்து ரகசியமாக வெளியேறினார். தங்களுக்கு வருமானம் தரும் சிறுமி தப்பிச் சென்றதால் ஆத்திரமடைந்த சித்தி, அச்சிறுமியைக் காணவில்லை என போலீஸில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பதிவு செய்து தேடுதல் வேட்டையில் இறங்கிய கோவளம் போலீஸார், விரைந்து செயல்பட்டு சிறுமியைக் கண்டுபிடித்து மீட்டனர். பின்னர் சிறுமியை சித்தியிடம் ஒப்படைக்க முற்பட்டபோது அந்த சிறுமியிடம் இரண்டு வெவ்வேறு ஆதார் அட்டைகள் இருந்ததும், அதில் வயதுகள் மாற்றி மாற்றிக் குறிப்பிடப்பட்டிருந்ததும் போலீஸாரின் கவனத்திற்கு வந்தது.

​இதையடுத்து, அச்சிறுமியைத் தனியாக அழைத்துச் சென்று மகளிர் போலீஸார் விசாரணை நடத்தியபோது, சித்தியும், சித்தப்பாவும் சிறுமியை பாலியல் கும்பலிடம் விட்டு பணம் சம்பாதித்துவந்த கொடுமை அம்பலமானது. உடனே, கோவளம் காவல் நிலைய ஆய்வாளர் வி.எம்.ஸ்ரீகுமார் மற்றும் நிலையப் பொறுப்பு அதிகாரி ஷீனா தலைமையிலான தனிப்படை போலீஸார் அதிரடி நடவடிக்கையைத் தொடங்கினர். தொழிச்சல் மற்றும் சப்பாத்து ஆகிய பகுதிகளில் ‘ஆயுர்கேரளா ஸ்பா’ நடத்தி வந்த ஆலப்புழா நடுவேல்முறி பகுதியைச் சேர்ந்த சஜித் குமார் (47), கோவளம் அவாடுதுறையில் ‘ட்ரீம்ஸ் ஸ்பா’ நடத்தி வந்த பூவார் பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் (46) ஆகிய இருவரை போலீஸார் உடனடியாகக் கைது செய்தனர்.

சஜித் குமார் மற்றும் நிஷாந்த்

சஜித் குமார் மற்றும் நிஷாந்த்

மேலும், தலைமறைவாக இருந்த சிறுமியின் சித்தி மற்றும் அவரது கணவரை ஆந்திராவிற்குச் சென்று தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இந்தக் கொடூரச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கேரளாவில் உள்ள மசாஜ் மற்றும் ஸ்பா மையங்கள் மீது ஒட்டுமொத்தமாகக் காவல்துறை தனது பிடியை இறுக்கியுள்ளது. சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி பி.விஜயனின் அதிரடி உத்தரவின்பேரில் மாநிலம் தழுவிய அளவில் “ஆபரேஷன் ஸ்பா’ என்ற பெயரில் நேற்று ஒரே நேரத்தில் தீவிர சோதனை வேட்டை முடுக்கிவிடப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *