காடுகளை அழிப்பது இந்தியாவின் சுற்றுச்சூழல் சமநிலையைக் குலைக்கும் என்று தனது 80-வது வயதிலும், வயோதிகத்தைப் பொருட்படுத்தாமல் 1970-களில் கேரள அரசு குந்திப்புழா ஆற்றின் குறுக்கே அமைக்க முடிவு செய்த நீர்மின் திட்டத்திற்கு எதிராக ஜானகி அம்மாள் தீவிரமாகப் குரல் கொடுத்தார். ஜானகி அம்மாள் போன்ற விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்களின் தீவிரப் போராட்டத்தால், 1983-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இந்த நீர்மின் திட்டத்தைக் கைவிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 1984-ல் அமைதிப் பள்ளத்தாக்கு பகுதி ‘தேசியப் பூங்காவாக’ அறிவிக்கப்பட்டு, நிரந்தரமாகப் பாதுகாக்கப்பட்டது.
தனது 86-வது வயதில் (1984 பிப்ரவரி 7) இயற்கை எய்துவதற்கு முன்பாக, சென்னை மாதவரத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகத்தின் தாவரவியல் ஆராய்ச்சி மையத்தில் தாவரங்கள், பூனைகள் மற்றும் பறவைகளுடனேயே தனது பெரும்பாலான நேரத்தை ஜானகி அம்மாள் செலவிட்டார்.
ஜானகி அம்மாள் மேக்னோலியா போன்ற மரவகத் தாவரங்களின் இளநாற்றுகளில் ‘கொல்சிசின்’ என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்தார். இந்த வேதிப்பொருள் தாவரங்களின் செல் பிரிதலை (Mitosis) மாற்றி, அவற்றின் குரோமோசோம் எண்ணிக்கையை இயல்பை விட இரண்டு மடங்காக மாற்றியது.
இதனால் உருவான தாவரங்கள் தடிமனான இலைகளையும், வழக்கத்தை விட பெரிய, வலுவான இதழ்களைக் கொண்ட மலர்களையும் பெற்றன. இந்த மாற்றத்தால் மலர்கள் நீண்ட நாட்களுக்கு வாடாமல் பொலிவுடன் இருக்கும் தன்மையைப் பெற்றன. அவரது இந்த அரிய கண்டுபிடிப்பால் உருவான ஒரு குறிப்பிட்ட மேக்னோலியா புதர்ச் செடிக்கு, அவரது நினைவாக ‘மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள்’ என்று அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டது.
“என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேச எதுவும் இல்லை, நான் செய்யும் வேலை மட்டுமே எனக்குப் பின் வாழும்” என்று ஜானகி அம்மாள் அடிக்கடி கூறுவார். அதற்கு சான்றாக லண்டன் விஸ்லியில் உள்ள ‘பேட்டில்ஸ்டன் ஹில்’ (Battleston Hill) பகுதியில் மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள் மலர்கள் இன்றும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத வசந்த காலத்தில் பூத்துக் குலுங்கி கொண்டிருக்கின்றன.