ஆலய உலா..Episode-2…காசி என்று சொன்னாலே புண்ணியம்! – Kumudam

Spread the love

உலகின் எல்லா மனிதர்களும் தன் பிறவியில் எதிர்பார்ப்பது மோட்சத்தைத்தான். அப்படி மோட்சம் தரும் திருத்தலங்கள் ஏழு உள்ளன. அயோத்தி, மதுரா, ஹரித்வார், காஞ்சி, அவந்தி, துவாரகா. மோட்சம் தந்தருளும் திருத்தலங்களில் மிக முக்கியமான க்ஷேத்திரம் காசி மாநகரம். அதனால்தான் தெற்கில் இருந்தும் எட்டுத்திசைகளில் இருந்தும் காசியாத்திரை மேற்கொண்டு பாவங்களைப் போக்கிக் கொண்டார்கள் பக்தர்கள்.

இன்றைக்கும் கங்காதேவியை வணங்கவும் காசிநாதன் விஸ்வநாதரை தரிசிக்கவும் அன்னபூரணியை அகம் குளிர தரிசித்துப் பிரார்த்திக்கவும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். ‘கஸ்’ என்றால் ஒளிர்தல் என்று அர்த்தம். இதுவே காசி என மருவியது.  நகருக்குத் தெற்கில் அஸி நதியும் வட கிழக்குப் பகுதியில் வருணை நதியும் கங்கையுடன் கலப்பதால் இந்தத் திருத்தலம் வாரணாசி என்றும் அழைக்கப்படுகிறது. நம் மனத்தில் உள்ள இருளை அகற்றி, ஆணவத்தையும் கர்வத்தையும் அழித்து, நம்மைப் புடம்போட்டு தெளியவைக்கிற தலம்தான் காசி.

அற்புதமான க்ஷேத்திரம் காசி. காசிக்கு நிகரான திருத்தலங்கள் என்று பல தலங்களைச் சொல்லுவோம். ஆனால் காசிக்கு முந்தைய உதாரணமாக எந்தத் தலத்தையும் சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு காசி க்ஷேத்திரம் பன்னெடுங்காலங்கள் தொன்மை மிக்க பூமியாகத் திகழ்கிறது என்பதுதான் காசியம்பதி சரிதம் சொல்லும் ஆச்சரியம்! .

யுகங்கள் நான்கு என்கிறோம். கிருதயுகத்தில் திரிசூல வடிவம் என்றும் திரேதா யுகத்தில் சக்கர வடிவம் என்றும் துவாபர யுகத்தில் தேர் வடிவம் என்றும் கலியுகத்தில் சங்குவடிவம் என்றும் காசி மாநகரம் திகழ்கிறது என்று காசியம்பதியைப் புகழ்கின்றன புராண நூல்கள். சிவபெருமானும் உமையவளும் திருமணம் முடிந்ததும் காசியம்பதிக்கு வந்தனர். பிரளய காலத்தில் அழியாமல் இருந்தது காசியம்பதி. அவர்கள் கால் ஊன்றிய தலம் காசி என்று போற்றப்படுகிறது.

காசியம்பதியில் உயிர் துறப்பவர்களின் காதுகளில், சாட்ஷாத் அந்தக் காசி விஸ்வநாதரே சூட்சுமமாக வந்து, பிரணவ மந்திரத்தை ஓதி, மோட்சம் அடையச் செய்கிறார் என்று இன்றைக்கும் சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள். இங்கே… காசியம்பதியில், ஒன்றல்ல இரண்டல்ல… பல கோடி சிவலிங்கங்கள் இருக்கின்றன  என்று பிரம்ம வைவர்த்த புராணம் விவரிக்கிறது. காசிக்கு வரவேண்டும்; நம் பாதம் இந்த மண்ணில் படவேண்டும். கங்கையில் நீராடவேண்டும்; காசி விஸ்வநாதரையும் விசாலாட்சியையும் மனதாரப் பிரார்த்தனை செய்யவேண்டும்.

எவரொருவர், இந்தப் பிறவியில், ஒருமுறையேனும் காசிக்கு வந்து, கங்கையில் நீராடி, விஸ்வநாதேஸ்வரரை வணங்குகிறார்களோ அவர்களுக்கு சொர்க்கத்தில் இடமுண்டு என்றும் முன் ஜென்மப் பாவக்கணக்குகள் நிவர்த்தியாகிவிடும் என்றும் விவரிக்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள். அருந்ததனா, சுதர்சனா, பிரம்மாவதாரா, சுதர்சனா, ராமநகரா, மாளநி, பூபவதி, காசிபுரா, காசியம்பதி, கேதுமதி என்று காசியைச் சொல்லும் பெயர்கள் ஏராளம். முந்தைய ஜென்மங்களில் எண்ணிக்கையில்லா ஆலயங்களுக்கு சென்று வழிபட்டவர்களுக்கே இந்த ஜென்மத்தில் காசி நகரின் கதவுகள் திறக்கும் என்கிறது சிவமகா புராணம்.

’’காசி திருத்தலத்தில், பதினோரு சுயம்பு லிங்கங்கள் உள்ளன. தேவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட 46 சிவலிங்கங்கள் உள்ளன. முனிவர்களும் யோகிகளும் 47 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டிருக்கிறார்களாம். அவ்வளவு ஏன்… நவக்கிரக தெய்வங்களும்  வணங்கி வழிபட்ட ஏழு சிவலிங்கங்கள் உள்ளன. இதில் ராகுவும் கேதுவும் சாயாகிரகங்கள். அதாவது நிழல் கிரகங்கள். சிவகணங்கள் 40 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டன.

சிவனடியார்களும் பக்தர்களும் 295 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செது வழிபட்டனர். காசி திருத்தலத்தில் மேலும் 65 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன’’ என காசி திருத்தலத்தின் மெய்சிலிர்க்க விவரிக்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள். காசியைப் பற்றிச் சொல்லவும் சொன்னதைக் கேட்டு வியக்கவும் திகைக்கவுமான விஷயங்கள் ஆயிரமாயிரம் உண்டு.
மரணம் மங்களம் யத்ர
விபூதிஸ விபூஷணம்
கெளபீணம் யத்ர கெளஸேயம்
ஸா காஸி கேன மீயதே எனும் ஸ்லோகம் ஒன்று போதும்…

அதாவது, எந்த இடத்தில் மரணம் கூட மங்களகரமானது எனக் கருதப்படுகிறதோ, எந்த இடத்தில் விபூதியே ஆகச்சிறந்த ஆபரணம் எனத் திகழ்கிறதோ, எந்த இடத்தில் கோவணமே மிகச்சிறந்த பட்டாடை என நினைக்கப்படுகிறதோ அதுவே காசி க்ஷேத்திரம். காசியின் முழுப்பெருமையையும் எவராலும் விவரிக்க முடியாது,
கங்கா நதிதான் காசியில் ஓடுகிறது. ஆனாலும் காசி என்பது சாகரம். சாகரம் என்றால் பெருங்கடல்!

– வி.ராம்ஜி

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *