புதுடெல்லி: சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனக்கூறி ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு புதிதாக தொடர்ந்துள்ள வழக்கில், ‘இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ஏற்கெனவே எழுப்பியுள்ள கேள்விகளுக்கு சட்டப்பூர்வமாக தீர்வு காணும்வரை பொறுத்திருக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தி்ல் கலைஞர் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக மசோதா ஆகியவை கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.
இதையடுத்து ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோர், ‘‘இந்த மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் அனுப்பி வைக்க முடியாது. ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் உத்தரவை அமல்படுத்த ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்’’ என வாதிட்டனர்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இந்த விவகாரத்தில் ஆளுநர் அவரது கடமையைத்தான் செய்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் ஆளுநர் 381 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பி வைத்துள்ளார். தமிழக அரசு தொடர்ந்துள்ள இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக இருந்தால் 381 மசோதாக்களின் முரண்பாடு குறித்தும் விசாரிக்க தனித்தனி அமர்வுகளைத்தான் ஏற்படுத்த வேண்டும்’’ என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘‘ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள 14 கேள்விகளுக்கு சட்டப்பூர்வ தீர்வு காணும்வரை பொறுத்திருக்க வேண்டும்’’ எனக்கூறி வழக்கு விசார ணையை 4 வாரம் தள்ளிவைத்துள்ளார்.