ஆளுநர் vs சட்டசபை.. அன்று ஸ்டாலின்.. இன்று விஜய்.. திமுக நினைத்தே பார்க்காத பல ட்விஸ்ட் | Governor vs. Assembly: Many unexpected twists for the DMK during Vijay’s tenure

Spread the love

Tamilnadu

oi-Velmurugan P

சென்னை: சட்டசபையில் நேற்று நடந்த நிகழ்வுகள் எல்லாமே சாதாரணமாக கடந்து போகக்கூடிய நிகழ்வு கிடையாது. ஏனெனில் வழக்கமாக திமுக ஆட்சியில் ஆளுநர் ரவி இருக்கும் போது சட்டசபை கூடினாலோ போர்க்களம் போல் பிரச்சனை வெடிக்கும்.. தமிழ்தாய் வாழ்த்து தான் முதலில் வாசிப்பார்கள். தேசிய கீதம் வாசிக்க சொல்வார் ஆளுநர். ஆனால் அதனை ஏற்க சபாநாயகர் மறுப்பார். இதனால் ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்வார். அதேபோல் அப்படியே வாசித்தாலும், பல வார்த்தைகளை பேச மாட்டார். ஆனால் இன்றுதவெக அரசின் நடவடிக்கையும், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரின் நடவடிக்கையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில் தமிழகத்தில் சட்டசபை கூடினாலே சுவாரஸ்யங்களுக்கும் அதிரடிகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்று. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக ஆளுநர் மாளிகைக்கும் தமிழக அரசுக்கும் இடையே நடந்த முட்டல், மோதல்கள் டெல்லியில் உச்ச நீதிமன்றம் வரை எதிரொலித்தன. உச்ச நீதிமன்றமே இருவரையும் அழைத்து பேசி பஞ்சாயத்து பேசாத குறைதான் பாக்கி, அந்த அளவிற்கு பிரச்சனை இருந்தது. ஆனால், நேற்று (ஜூன் 18, 2026) தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள், அரசியல் விமர்சகர்கள் பலரையும் வாயடைத்து போக வைத்துள்ளது. திமுகவிற்கு நிச்சயம் இது பெரிய ட்விஸ்ட் தான். ஏன் என்று பார்ப்போம்.

Governor vs Assembly Many unexpected twists for the DMK during Vijay s tenure

அன்று திமுக ஆட்சியில் ஆளுநரின் செயல்பாடுகள்

திமுக ஆட்சியில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, அரசு தயாரித்துக் கொடுத்த உரையை அப்படியே வாசிக்க மறுத்தார். ‘திராவிட மாடல்’, ‘சமூக நீதி’ போன்ற வார்த்தைகளைத் தவிர்த்தார்; தமக்கு விருப்பமான வரிகளைத் தன்னிச்சையாகச் சேர்த்தார். இதனால், கோபமடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் முன்னிலையிலேயே “அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் ஏற வேண்டும்” எனத் தீர்மானம் கொண்டு வர, ஆளுநர் ரவி பாதியிலேயே அவையை விட்டு விறுவிறுவென்று வெளியேறி உள்ளார். அந்த சம்பவங்கள் ஒரு பெரும் அரசியல் போர்க்களமாகவே காட்சியளித்தது.

இன்று தவெக ஆட்சியில் ஆளுநரின் செயல்பாடுகள்

ஆனால் இன்று, தற்போதைய ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் சட்டமன்றத்திற்கு வந்து, அரசு தயாரித்துக் கொடுத்த கொள்கை விளக்க உரையை ஒரு வரி, ஒரு எழுத்து கூட மாற்றாமல் அப்படியே முழுமையாக வாசித்து முடித்துள்ளார். வியப்பு என்னவென்றால், அந்த உரையில் மத்திய அரசை விமர்சிக்கும் வார்த்தைகளும், தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிரான வரிகளும் இருந்தன. இருந்தும், ஆளுநர் எதையும் தவிர்க்காமல் அப்படியே வாசித்தார்.

தவெக பாஜகவிற்கு ரகசிய கனெக்ஷன்: உதயநிதி விமர்சனம்

இதைக் கவனித்த திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின், “கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் எங்களுடைய அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாகப் படித்ததே இல்லை. ஆனால் இன்று, ஒரு வரி மாற்றாமல் அப்படியே வாசித்துள்ளார். இதிலிருந்தே இந்த தவெகஅரசுக்கும், பாஜகவுக்கும் இடையே உள்ள ‘ரகசிய கனெக்‌ஷன்’ வெட்டவெளிச்சமாகியுள்ளது” என்று அனல் பறக்க செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

தேசிய கீதம் அன்று

அதேபோல் ஆளுநர் உரை தொடங்கும் முன் தமிழ்த்தாய் வாழ்த்தும், உரை முடிந்த பின் தேசிய கீதமும் இசைக்கப்படும் என்பது தமிழக மரபு. ஆனால், கடந்த காலங்களில் ஆளுநர் உரைக்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கடாது. இதனால் வெளிநடப்பு செய்வதே ஆளுநர் ரவிக்கு வாடிக்கையாக இருந்தது.

தேசிய கீதம் இன்று

இன்று எந்தவொரு இடையூறும் இல்லை, கூச்சல் குழப்பம் இல்லை, வெளிநடப்பும் இல்லை! அதைவிட முக்கியமாக, சட்டமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், இறுதியிலும் என இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது. இதனைப் பெருமிதத்தோடு சுட்டிக்காட்டிய ஆளுநர் அர்லேகர், “3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநர் உரை எவ்வித இடையூறும் இன்றி முழுமையாக வாசிக்கப்பட்டுள்ளது ஒரு ‘புதிய உதயம்’. இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது ஒரு ‘சரித்திர நிகழ்வு’. இது மக்களாட்சியின் மாண்பை நிலைநாட்டியுள்ளது; மனதுக்கு நிறைவாக இருக்கிறது” என உருகியிருக்கிறார்.

ஆச்சரியமான மாற்றம்

அன்று தமிழக ஆளுநரை எதிர்த்து ‘கெத்து’ காட்டிய அதே சட்டமன்றக் கூடம், இன்று எந்தவித எதிர்ப்பும் இன்றி இணக்கமாகக் காட்சியளிக்கிறது. மத்திய அரசை விமர்சிக்கும் உரையை ஆளுநரே வாசிப்பதும், அதற்கு ஆளுநரே “மன நிறைவு” எனப் பாராட்டுப் பத்திரம் வாசிப்பதும் தமிழக அரசியலில் விசித்திரத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது. அன்று மோதல்… இன்று இணக்கம்! இந்த ‘புதிய உதயம்’ தற்காலிகமானதா அல்லது தேர்தல் கணக்குகளுக்கான அஸ்திவாரமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் இடைத்தேர்தல் முடிந்தால் தான் உண்மையான நிலைமை தெரியவரும். ஏனெனில் மத்திய அரசை எந்த வகையிலும் விஜய் விமர்சிப்பதே இல்லை. தேர்தலுக்கு முன்பும் சரி, தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்த பின்னரும் சரி விஜய் அப்படியே தொடர்கிறார். என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *