திமுக எம்.பி கனிமொழி தன் எக்ஸ் பக்கத்தில், “மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. விடிந்ததும், இதுபோன்ற செய்தியை கேட்கவேண்டிய நிலையில் தமிழ்நாடு உள்ளது வேதனையளிக்கிறது. குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என யாருக்கும் பாதுப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு. சட்ட ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளதை, இந்த புதிய அரசு அறிந்துள்ளாதா என்பதே சந்தேகமாகவுள்ளது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு விளக்கமளிக்கும் வகையில் முதல்வர் விஜய்யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்,“ கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப்பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், வழக்கினை விரைவுபடுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், காவல்துறை, சமூகநலத்துறை மற்றும் அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பாலியல் குற்ற வழக்கினை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தினார்கள். வழக்கினை முறையாக நடத்தி, கடும் தண்டனை பெற்றுத்தருவது குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவோரைத் தடுக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.