மேலும், சோமாஸ்கந்தர், நவவீரர்கள், முத்துக்குமாரசாமி, கஜவள்ளி, தெய்வானைதேவி, தட்சிணாமூர்த்தி, நாகதேவதை, நவ வீரர்கள் மற்றும் நவகிரகங்களைத் தரிசிக்க முடிகிறது. நவகிரகத்தில் சூரியதேவன் தன் தேவியருடன் காட்சி தருவது சிறப்பு. தெய்வானை சந்நிதியை அடுத்து கச்சியப்ப முனிவர், அருணகிரி நாதர் ஆகியோரும் அருள்பாலிக்கிறார்கள்.
இப்பிராகரத்திலேயே மடைப்பள்ளியும் தியான மண்டபமும் அமைந்துள்ளன. தியான மண்டபத்தை அடுத்து, திருச்சுற்றின் மேற்கு கோடியில் வடக்கு நோக்கிய சந்நிதியில் நாக சுப்ரமணியர் வள்ளி, தெய்வயானையுடன் காட்சி தருகிறார். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை இந்தத் திருமூர்த்தங்களுக்கே திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதே மண்டபத்தில் உற்சவத் திருமேனிகளையும் நாம் வழிபடலாம். மேலும் மூலவரின் உற்சவ விக்கிரகமும் தனிசந்நிதியில் அமைந்திருக்கிறது.

மூலவரான சுப்ரமணியர் ஒரு திருமுகமும், நான்கு திருக் கரங்களுடனும் அருள்கிறார். அவரின் மேலிரு கரங்களில் ருத்ராட்ச மாலையும், கமண்டலமும் திகழ, கீழ் வலக் கரத்தால் அபய ஹஸ்தம் காட்டியும், இடக் கரத்தை தொடையின் மீது வைத்தவாறும், அருட்காட்சி தருகிறார் இந்த வேலவன்.
மற்ற எந்த ஆலயத்திலும் இல்லாத இன்னொரு சிறப்பு… இங்கே மூலவருக்கு அபிஷேகத்துக்கு முன்னர் எண்ணெய்க்குப் பதில் தேனாலேயே அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும், முதலாவதாக பஞ்சாமிர்த அபிஷேகமே செய்யப்படுகிறது.
ஞானத்தின் வடிவமாக இந்த முருகப்பெருமான் திகழ்வதால் இங்கே வந்து முருகனைத் தரிசனம் செய்தால் நம் மனத்தின் விருப்பங்கள் நிறைவேறும். நல்ல புத்திக்கூர்மை உண்டாகும். வாழ்வில் எடுக்கும் முடிவுகள் நன்மையாக அமையும் என்கிறார்கள் பக்தர்கள்.
இங்கே முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகமும், ஐப்பசியில் கந்தசஷ்டி திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன. 12 நாள்கள் நடைபெறும் விசாகப் பெருவிழாவில் மூன்றாவது நாளன்று மயில் வாகனத்தின் மேல் முருகப் பெருமான் திருவீதி உலா வருகிறார். அதே நாளில் கச்சியப்பர், அருணகிரிநாதர், நவவீரர்கள் ஆகியோரின் புறப்பாடும் நடைபெறுகின்றன.