தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களையும், வித்தியாசமான திரைமொழியையும் முன்வைக்கும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த படைப்பான ‘பாக்கெட் நாவல்’ திரைப்படம் தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பது யார் என்ற கேள்வி கடந்த சில நாட்களாக சினிமா வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது படக்குழுவே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு அந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இளையராஜா – தியாகராஜன் குமாரராஜா இடையே கருத்து வேறுபாடா?
‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. தனித்துவமான கதை சொல்லும் பாணியைக் கொண்ட தியாகராஜன் குமாரராஜாவின் திரைப்படத்திற்கு, இளையராஜாவின் இசை எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவானது.
இந்நிலையில், படத்தின் இசை உருவாக்கம் தொடர்பாக இயக்குநருக்கும் இசையமைப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகச் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. பாடல்களின் உருவாக்கம், பின்னணி இசையின் அணுகுமுறை அல்லது படத்தின் இசை தொடர்பான முடிவுகள் ஆகியவற்றில் ஏற்பட்ட முரண்பாடுகள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, இளையராஜா இப்படத்திலிருந்து விலகியதாகவும், அவருக்குப் பதிலாக ஜி.வி. பிரகாஷ் குமாரை இசையமைக்க வைக்கப் படக்குழு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இளையராஜா உண்மையிலேயே விலகினாரா, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாரா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே உறுதியாகும்.
ஏற்கெனவே இணைந்து பணியாற்றிய இளையராஜா – தியாகராஜன் குமாரராஜா!
இதற்குமுன், இளையராஜாவுடன் தியாகராஜன் குமாரராஜா பணியாற்றி “நினைவோ ஒரு பறவை ” என்ற அந்தோலஜி படத்தில் ஒரு பாகம் இணைந்து பணியாற்றியுள்ளனர். அந்த பாகத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.
அதன்பின் அந்த பட நிகழ்ச்சி ஒன்றில் தியாகராஜ குமாரராஜாவே ” அணைத்து இயக்குனர்களும் பணியாற்றவேண்டிய ஒரு இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்கள் என்று புகழ்ந்து கூறியிருப்பார் . அப்படியிருக்கையில், அதிகாரபூர்வமாக இப்படத்திலிருந்து இளையராஜா விலகியிருப்பது சினிமா வட்டாரங்களில் பெரும் சர்ச்சையாகவும், பேசும்பொருளாகவும் மாறியுள்ளது.
இளையராஜா இல்லை… ஜி.வி. பிரகாஷ்தான்!
‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்திற்கு முதலில் இசைஞானி இளையராஜா இசையமைப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனால், மீண்டும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா – இளையராஜா கூட்டணியில் உருவாகும் இசை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
ஆனால், படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டதாகப் படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டபோது, அதில் இளையராஜாவின் பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து, அவர் படத்திலிருந்து விலகிவிட்டதாகவும், அவருக்குப் பதிலாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இணையவுள்ளதாகவும் தகவல்கள் பரவின.
தற்போது இந்தத் தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில், ஜி.வி. பிரகாஷ் குமார்தான் ‘பாக்கெட் நாவல்’ படத்தின் இசையமைப்பாளர் என்பதைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் கடந்த சில நாட்களாக நிலவி வந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
NOT A RUMOUR ANYMORE… IT’S OFFICIAL!
படக்குழு வெளியிட்டுள்ள புதிய அப்டேட்டில், இசையமைப்பாளர் யார் என்பது குறித்துப் பரவி வந்த தகவல்களைக் குறிப்பிடும் வகையில், “NOT A RUMOUR ANYMORE” மற்றும் “IT’S OFFICIAL” என்ற வாசகங்களுடன் ஜி.வி. பிரகாஷ் குமாரின் அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில் கழுத்து மற்றும் கைகளில் தங்க நகைகளுடன், தனக்கே உரிய ஸ்டைலில் பாடலுடன் மாஸாக என்ட்ரி கொடுக்கிறார் ஜி.வி. பிரகாஷ் குமார். இந்த வித்தியாசமான அறிமுகம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மூன்று முறை தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் குமார், இப்படத்தில் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
விரைவில் வெளியாகிறதா முதல் பாடல்?
‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் அறிமுக வீடியோவும் பாடலுடன் வெளியாகியுள்ளது.
அந்த பாடலில், “என் காட்டுல மழை வருது குடை பிடிக்காத, தார் ரோட்டுல வெயில் வருது குறுக்க நிக்காத ” என்ற பாடலில் ஆடிக்கொண்டே என்ட்ரி கொடுக்கிறார் ஜி.வி. பிரகாஷ் குமார்.
இதனால், படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் அறிமுகமான பாடலே முதல் பாடலாக இருக்கலாம் அல்லது வேறு பாடலைக் கூட முதல் சிங்கிளாக படக்குழு இன்னும் சில தினங்களில் வெளியிட வாய்ப்புள்ளதாக ரசிகர்களும் சினிமா விமர்சகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.
மீண்டும் இணையும் ‘சூப்பர் டீலக்ஸ்’ கூட்டணி!
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி, கிஷோர், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏற்கெனவே ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குநர் தியாகராஜா குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், இப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் இப்படத்தை வெளியிட படகுழுத் திட்டமிடப்பட்டுள்ளது.
ரசிகர்களால் அன்புடன் ‘ALIEN’ என்று அழைக்கப்படும் தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த படைப்பு என்பதே ‘பாக்கெட் நாவல்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், இசையமைப்பாளர்கள் மாறுவது போன்ற விஷயங்கள் எல்லாம் படத்தினை மேலும் கவனம் பெற செய்தது. தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக மாறியிருப்பது படத்தின் மீதான கவனத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஒருபுறம் விஜய் சேதுபதி உள்ளிட்ட நட்சத்திரங்களின் கூட்டணி, மறுபுறம் ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை என ‘பாக்கெட் நாவல்’ படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இனி வெளியாகப்போகும் முதல் பாடல் என்ன மாதிரியான இசை அனுபவத்தைக் கொடுக்கப்போகிறது என்பதுதான் ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பு!

