`இணைந்தும் செயல்பட மாட்டோம்; கட்சியை விட்டும் செல்ல மாட்டோம்’- இபிஎஸ்ஸுக்கு எதிராக சி.வி தரப்பு!

Spread the love

எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க டெல்லி சென்றபோதும் வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் அவருடன் சென்றிருந்தனர். அப்போது இருவரும் எடப்பாடி தலைமையின் முக்கியமான தூண்களாகவே பார்க்கப்பட்டனர்.

அப்படிப்பட்ட சூழலில், தற்போது இருவரும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்படப்போவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பது அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தாங்கள் எம்.எல்.ஏக்களாக இருப்பதால்தான் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து முழுமையாக நீக்காமல் இருப்பதாகவும் வேலுமணி – சி.வி.சண்முகம் தரப்பினர் கருதுவதாக கூறப்படுகிறது. எம்.எல்.ஏ பதவி இல்லாமல் இருந்திருந்தால் தங்களை எப்போதோ கட்சியில் இருந்து நீக்கியிருப்பார் என்றும் அவர்கள் காட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம்

எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம்

மறுபுறம், வேலுமணி தரப்பைச் சேர்ந்த சில எம்.எல்.ஏக்கள் மீண்டும் எடப்பாடி அணிக்கு திரும்பிய சம்பவமும் அரசியல் முக்கியத்துவம் பெற்றது. இதனால், சட்டப்பேரவையில் வேலுமணி – சி.வி.சண்முகம் தரப்பின் எண்ணிக்கை குறைந்தது. இதன் காரணமாக, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனி அரசியல் அணியை உருவாக்குவதைவிட, கட்சிக்குள்ளேயே இருந்து அரசியல் அழுத்தத்தை உருவாக்குவதே தற்போதைய அணுகுமுறையாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

கட்சியை விட்டு வெளியேறாமல், தனிக்கட்சி தொடங்காமல், அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்படாமல் இருப்பது என்பது அதிமுகவுக்குள் ஒரு புதிய அதிகார மையத்தை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்தகட்டமாக பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுமா, அங்கு தேர்தல் தோல்வி மற்றும் கட்சியின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்படுமா, வேலுமணி – சி.வி.சண்முகம் தரப்பினர் தங்களது ஆதரவு எம்.எல்.ஏக்களையும் மூத்த நிர்வாகிகளையும் ஒருங்கிணைக்கப் போகிறார்களா என்பது அதிமுக அரசியலில் முக்கிய கேள்விகளாக உருவெடுத்துள்ளன.

ஒருபுறம் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என்ற அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் நிலையில், மறுபுறம் அவருடன் இணைந்து செயல்படாமல் கட்சிக்குள்ளேயே இருந்து செயல்படுவோம் என வேலுமணி – சி.வி.சண்முகம் தரப்பு எடுத்துள்ள நிலைப்பாடு, அதிமுகவில் மோதல் முடிவுக்கு வரவில்லை என்பதையே காட்டுகிறது.

மே மாதத்தில் வெளிப்படையாக வெடித்த மோதல் பேச்சுவார்த்தை மூலம் தற்காலிகமாக தணிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அது வேறு வடிவத்தில் மீண்டும் உருவெடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில், வேலுமணி – சி.வி.சண்முகம் அத்தியாயம் முடிவுக்கு வரவில்லை; மாறாக, கட்சிக்குள்ளேயே இருந்து புதிய அரசியல் சமன்பாட்டை உருவாக்கும் கட்டத்தை எட்டியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *