
ஆலய உலா..! – வி.ராம்ஜி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் உள்ளது திருநின்றவூர் எனும் ஊர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் பூசலார் நாயனார் பற்றித் தெரியுமா? சிவபெருமானுக்கு அவர் கோயில் கட்டினார் என்பதை அறிவீர்களா? அந்தக் கோயிலை மன்னன் ஊரெல்லாம் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று புராணம் சொல்லும் சேதியைக் கேட்டிருக்கிறீர்களா? பூசலார் நாயனாருக்கும் இந்தத் திருநின்றவூருக்குமான தொடர்பு என்ன என்பதை அறிந்தால் வியப்பீர்கள்!
செல்வம் முக்கியமில்லை. மனமும் எண்ணமுமே முக்கியம் என்பதைத்தான் புராணங்கள் விவரிக்கின்றன. பக்தியில் நாம் உருகிப் பிரார்த்தனை செய்தால், அந்த இறைவனே மனமுருகி நம்மைத் தேடி வருவான் என்பதைத்தான் ஒவ்வொரு பக்திக்கதையும் உணர்த்துகின்றன.
அவர் மிகச் சிறந்த சிவபக்தர். எண்ணமும் செயலும் எப்போதும் சிவநினைப்பிலேயே இருந்தது. எப்போதும் சிவநாமத்தையே சொல்லிக் கொண்டிருந்தார். சதாசர்வகாலமும் சதாசிவத்தையே நினைத்துக்கொண்டிருந்தார். அவர்தான் பூசலார். பூசலார் நாயனார்! 63 நாயன்மார்களில் ஒருவர். இதெல்லாம் உலகுக்கு பூசலார் தெரிந்தபிறகு நாயன்மார்களில் ஒருவரானார். அப்படி அவரை உலகுக்கு உணர்த்தியவர் சாட்ஷாத் சிவபெருமானே!
ஒருநாள் பூசலாருக்கு ஒரு ஆசை… அப்பன் சிவனுக்கு ஒரு ஆலயம் கட்டினால் என்ன?. இந்த ஆசை பெருங்கனவாக,லட்சியமாக,வேட்கையா
ஒருநாள் உடலால் துவண்டுபோன பூசலார், சிலுசிலுவென காற்றடிக்கிற, அமைதியான ஓரிடத்தில் அமர்ந்தார். மனதுக்குள்ளேயே கோயிலைக் கட்டத் தொடங்கினார். ஒருநாள் ரெண்டுநாள் என்றில்லாமல், பலகாலமாக இப்படியே அமர்ந்து கோயில் கட்டுகின்ற கற்பனைக்குள் ஒன்றிப்போனார். ஒரு பிரமாண்டமான சிவாலயத்தை, தன் மனதுக்குள்ளேயே கட்டத் துவங்கினார் பூசலார். ஆகம விதிப்படி ஒரு கோயில் எப்படி கட்டவேண்டுமோ அதன்படி, மனதுக்குள் கட்டத் தொடங்கினார்.
முகம் தாமரையென மலர்ந்தது. கண்களில் தேஜஸ் பெருகியது. தான் அறியாமலே ஆனந்தப் பரவசத்தில் கண்ணீர் சொரிந்தார் பூசலார். முதல்கட்டமாக, ஓரிடத்தில் அமர்ந்து கொண்டார். கண்கள் மூடினார். சிவனாரை வேண்டினார். , மளமளவென வேலைகளை மனதுக்குள்ளேயே முடுக்கிவிட்டார். கோபுரம், விமானம், பலிபீடம், கொடிமரம் என பார்த்துப்பார்த்து மனதாலேயே கட்டிய ஆலயத்திற்கு குடமுழுக்கு செய்ய நாளும் குறித்தார் பூசலார். இதையெல்லாம் அறியாமல் இருப்பாரா ஈசன்? தன் பக்தனின் ஆசையை உணர்ந்தார். இப்படியொரு பக்தனை, அடியாரை உலகறியச் செய்யவேண்டும் என நினைத்தார் சிவபெருமான்.
அதே வேளையில்… காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராஜசிம்ம பல்லவ மன்னன், சிவனாருக்கு அழகிய, கருங்கல்லால் செய்யப்பட்ட ஆலயத்தை மிக பிரம்மாண்டமாக, ஏராளமான பொருட்செலவில் கட்டி முடித்திருந்தான். கும்பாபிஷேகம் நடத்துவதற்கு நாள் குறித்தான்.
பூசலார் குறித்த நாளும் மன்னன் குறித்த நாளும் ஒரே நாளாக அமைந்தது. அதுதான் சிவ விளையாட்டு. சிவனாரின் திருவிளையாட்டு. பார்த்துப்பார்த்து கட்டிய கோயிலைக் கண்டு சிலிர்த்தான் மன்னன். சிலைகளையும் தூண்களையும் தொட்டுத்தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டான். கும்பாபிஷே நாளில், தென்னாடுடைய சிவன் வரவேண்டும்; எனக்கு அருளவேண்டும் என வேண்டினான். அன்றைய நாளில், அதேநினைப்பில் தூங்கிப்போனான் மன்னன். அரசனின் கனவில் சிவனார் வந்தார். ‘கும்பாபிஷேகத் தேதியை மாற்ற முடியுமா? உன் தேசத்திலேயே என் பக்தர் ஒருவர் எனக்காக, அழகாக கோயில் கட்டியிருக்கிறார். அங்கே கும்பாபிஷேகம். நான் அங்கேதான் இருப்பேன். ஆகவே தேதியை மாற்ற முடியுமா?’’ என்று கேட்டார்.
இந்தச் சொற்கள் செவிகளில் விழுந்தது. விழுந்தடித்து எழுந்தான் மன்னன். அதிர்ந்தான். கலங்கினான். கண்ணீர்விட்டான். விடிந்தும் விடியாததுமாக, அமைச்சர்களையும் படைகளையும் அழைத்தான். தன் படைகளுடன் கிளம்பினான். ஊர் ஊராக அலைந்துதிரிந்தான். பார்ப்பவர்களிடமெல்லாம் புதிய கோயில் குறித்து விசாரித்தான். அங்கே, அந்த ஊரில் எந்தக் கோயிலும் புதிதாகக் கட்டப்படவில்லை.
ஊர்மக்களும் ‘இங்கே யாரும் கோயிலும் கட்டலை’ என்றார்கள். விசாரித்தபடியே வந்த மன்னன், வனத்தில் அமர்ந்திருக்கும் பூசலாரைப் பார்த்தான். குதிரையில் இருந்து இறங்கினான். ’இங்கே கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடக்கப்போகிறதாமே…’ என்று கேட்டான். ‘ஆமாம்…’ என்றார் பூசலார். ‘கோயில் எங்கே?’ என்று விழிகள் விரியக் கேட்டார். ‘இங்கே..’ என்று தன் நெஞ்சுப்பகுதியைத் தொட்டுச் சொன்னார்.
தன் நெஞ்சுப் பகுதியைத் தொட்டு, ‘இங்கேதான் இருக்கிறது கோயில்’ என்று, கோயில் கட்டுமானத்தின் முழுப்பணிகளையும் எடுத்துரைக்க… அதிசயித்த மன்னர், பூசலாரின் காலில் விழுந்து வணங்கினான். பூசலாரின் இறைபக்தியை உணர்ந்த மன்னன், அவரது வேண்டுகோளின் படி மனதில் கட்டிய ஆலயத்தின் அமைப்பைப் போலவே திருநின்றவூரில் ஆலயம் எழுப்பினான். பூசலாரும் நாயன்மார்களில் ஒருவரானார்!
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரில் உள்ள கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவனின் திருநாமம் ஸ்ரீஇருதயாலீஸ்வரர். இதயத்தில் கட்டிய கோயிலில் அமைந்திருக்கும் இறைவனின் திருநாமம் இருதயாலீஸ்வரர். இங்கு வந்து இருதயாலீஸ்வரரை வேண்டிக் கொண்டால், இதயத்தில் உள்ள கோளாறுகள் அனைத்தும் நீங்கப்பெறலாம் என்பது ஐதீகம்! நோய் பூரணமாக குணம் பெறும். மனோதிடம் பெருகும். மனக்குழப்பங்கள் அகலும். மங்காத செல்வம் கிடைத்து இனிதே வாழச் செய்வார் இருதயாலீஸ்வரர்!