“இது உ.பி அல்ல; புல்டோசர் கலாசாரத்தை அனுமதிக்காதீர்” – மகாராஷ்டிரா அரசுக்கு உயர் நீதிமன்றம் குட்டு! | “This is not Uttar Pradesh”: Do not allow the ‘Bulldozer Culture’ in Maharashtra—High Court

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜிநகர் மாநகராட்சி நிர்வாகம் கடந்த வாரம் திடீரென ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி கவுன்சிலர் வீட்டை புல்டோசர் கொண்டு இடித்தது.

கவுன்சிலர் மதீன் பட்டேல் மற்றும் கனீப் கான் ஆகியோரது வீடுகள் எந்த வித முன்னெச்சரிக்கை நோட்டீஸும் கொடுக்காமல் இடிக்கப்பட்டன. இதை எதிர்த்து மதீன் பட்டேல் மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

நீதிபதி சித்தேஷ்வர் தோம்ப்ரே தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், படேல் மற்றும் கான் ஆகியோரின் மனுக்களை விசாரித்தது.

விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், “வீடு கட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல. உங்களையும் என்னையும் போல் எல்லோராலும் வீடு கட்ட முடியாது. புல்டோசர் கலாசாரத்தை மகாராஷ்டிராவில் நுழைய அனுமதிக்காதீர்கள். இது உ.பி. அல்லது பீகார் அல்ல. உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட 15 நாள் அறிவிப்பு காலம் உட்பட எந்த விதிகளும் பின்பற்றப்படவில்லை. நடவடிக்கை தன்னிச்சையானது.

இடிக்கப்பட்ட கட்டிடம்

இடிக்கப்பட்ட கட்டிடம்

இந்த நடவடிக்கை முழு குடும்பத்தையும் வீடற்றதாக ஆக்கியுள்ளது. சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி நிர்வாகம் இடிக்கும் முன் குறிப்பிட்ட சட்டவிரோத பகுதிகளை அடையாளம் கண்டுள்ளதா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

“‘வீட்டின் எந்தப் பகுதி சட்டவிரோதமானது என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்திருக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின்படி, 15 நாள் அவகாசம் வழங்கப்பட வேண்டும். அதுவும் செய்யப்படவில்லை,” என்று நீதிபதிகள் மேலும் குறிப்பிட்டனர்.

முன்னதாக மாநகராட்சி தரப்பில் உதவி கமிஷனர் சாம்பாஜி ஆஜராகி, ஏற்கனவே கட்டமைப்புகள் இடிக்கப்பட்டுள்ளதால் மனுக்கள் பயனற்றதாகிவிட்டன என்றும், மனுதாரர்கள் கீழ் நீதிமன்றத்தில் சிவில் கோர்ட்களை நாடுமாறும் தெரிவித்தார்.

சமீபத்தில் நாசிக்கில் டி.சி.எஸ் நிறுவனத்தில் நடந்த சர்ச்ச்சைகள் தொடர்பான குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த டிசிஎஸ் ஊழியர் பதுங்கி இருந்த வீட்டையும் படேலின் வீடு மற்றும் அலுவலகத்தையும் மே 13 அன்று இடித்தது.

கானுக்குச் சொந்தமான கடை மற்றும் படேலின் தந்தை பெயரில் உள்ள வீடு உள்ளிட்ட அடுத்தடுத்த சொத்துக்களும் முன்னறிவிப்பின்றி இடித்துத் தள்ளப்பட்டதையடுத்து சர்ச்சையைக் கிளப்பியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *