Tamilnadu
oi-Velmurugan P
சென்னை: முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில், பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் ஐ.டி. கார்டு வழங்கப்படும் என த.வெ.க அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். அதாவது, தமிழ்நாட்டில் இனி ஒவ்வொரு மாணவ-மாணவியரும் தங்கள் சாதி அடையாளத்தைக் கழுத்தில் தொங்க விட்டுக்கொள்ளப் போகும் அவலத்தை உருவாக்க நினைக்கிறது த.வெ.க. அரசு என்று திமுக ஐடி விங்க் விமர்சித்துள்ளது.
வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, “பள்ளிக்கு செல்கிற குழந்தைகள் அனைவருக்குமே ஆண்டுதோறும் சாதி சான்றிதழை வாங்குவதற்கு மாற்றத்தை உருவாக்குதற்காக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். அவர்களுக்கு அடையாள அட்டை ஒன்றை வழங்க முடிவு செய்துள்ளோம். அதில் மாணவர்களுடைய முகவரி, சாதி சான்றிதழ், ரத்த வகை, ஆதார் மற்றும் தொலைபேசி எண் ஆகியவை இணைக்கப்படும். 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு முதற்கட்டமாக வழங்க உள்ளோம்” இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

திமுக ஐடி விங்க் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், “சட்டமன்றத்தை ‘சத்த’மன்றமாக்கி, சமூக நீதி என்று ஹைடெசிபிளில் குரல் கொடுத்த முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில், பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் ஐ.டி. கார்டு வழங்கப்படும் என த.வெ.க அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். அதாவது, தமிழ்நாட்டில் இனி ஒவ்வொரு மாணவ-மாணவியரும் தங்கள் சாதி அடையாளத்தைக் கழுத்தில் தொங்க விட்டுக்கொள்ளப் போகும் அவலத்தை உருவாக்க நினைக்கிறது த.வெ.க. அரசு.
காலம் காலமாக கல்வி மறுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு, எவ்விதத் தடையுமின்றி, உரிய முறையில் கல்வி கிடைக்க வேண்டும் என்பதுதான் சமூக நீதி. அதனால்தான், இடஒதுக்கீடு அடிப்படையில் பள்ளிகளில் சாதிச் சான்றிதழ் தேவைப்படுகிறது. அது, கல்வி வாய்ப்பைப் பெறுவதற்காகத்தானே தவிர, கழுத்தில் தொங்க விட்டுக் கொள்வதற்கான பெருமித அடையாளமல்ல.
ஒரு மாணவர் எந்தப் பள்ளியில் படிக்கிறார், அவர் பெயர் என்ன, எந்த வகுப்பில் படிக்கிறார், அவருக்கானத் தொடர்பு எண் என்ன, அவசரத் தேவைக்காக அவருடைய ரத்தவகை என்ன என்பன போன்றவைதான் ஐ.டி.கார்டில் இருக்க வேண்டும். இந்த மாணவன் இன்ன சாதி, அந்த மாணவன் இன்ன சாதி என்று கழுத்தில் தொங்க விட்டுக் கொள்ளும் போக்கு, மாணவ சமுதாயத்திடம் பிரிவினையையும் மோதலையும்தான் உண்டாக்கும். சாதி அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையிலான எந்த ஒரு அடையாளமும் சமூக நீதிக்கு எதிரானது.
முதல்வர் விஜய் உத்தரவில் இதைச் செய்யப் போகிறோம் என்கிறார் அமைச்சர். இதற்கும் விஜய் வாய் திறக்க மாட்டார். சமூக நீதியின் தாய்மடியாகத் திகழும் தமிழ்நாட்டை சமூக அநீதிக்கானத் தளமாக மாற்றுவதுதான் மாற்றமா முதல்வரே?” இவ்வாறு திமுக ஐடி விங்க் விமர்சித்துள்ளது.
இதனிடையே இந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், “அது தவறான செய்தி…” மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் ஜாதி சான்றிதழ் எப்போதும் இனைக்கப் போவதில்லை.. பிளட் குரூப், ஆதார் ஆவணங்கள் மட்டுமே அந்த அடையாள அட்டையில் இருக்கும் என விளக்கம் அளித்துள்ளார்.

