இது லிஸ்டிலேயே இல்லையே.. ராணிப்பேட்டையில் இல்லாத JK டயர்ஸ் ஆலையை இழுத்து மூட சொன்ன தவெக எம்எல்ஏ | TVK MLA calls for the closure of a JK Tyre plant—which does not exist in Ranipet

Spread the love

Business

oi-Velmurugan P

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘ஜே.கே. டயர்ஸ்’ (JK Tyre) உற்பத்தி ஆலை இருப்பதாகவும், அந்த ஆலை சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதால் அதை இழுத்து மூட வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா கோரிக்கை வைத்தார். ஆனால், அப்படி ஒரு ஆலை ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படவே இல்லை. அப்படியென்றால், அவர் எந்த ஆலையை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா, இன்று சட்டசபையில் பேசும்போது, “இங்கு ஜே.கே. டயர் கம்பெனி இருக்கிறது. இவர்கள் இரவெல்லாம் டயர்களை எரிய விடுகிறார்கள். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அங்குள்ள மக்களும் போராட்டம் செய்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை கடந்த ஆட்சியிலிருந்தே வைத்து வருகிறார்கள். கண்டிப்பாக நமது ஆட்சியில் அந்த கம்பெனியை இழுத்து மூட வேண்டும். அந்த கம்பெனி நமக்குத் தேவையில்லை. அங்கிருக்கும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என த.வெ.க. எம்.எல்.ஏ. தாஹிரா பேசும்போது கூறினார்.

TVK MLA calls for the closure of a JK Tyre plant which does not exist in Ranipet

இதற்குப் பதிலளித்துப் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.கே. ராஜீவ், “மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா அவர்களே, அந்தத் தகவல்களை எல்லாம் கொடுங்கள். இன்றே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆய்வு செய்யச் சொல்கிறேன். உங்களுக்கு அறிக்கையை தருகிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, “ஜே.கே. டயர்ஸ் ஆலையை மூட வேண்டும் என்று சொல்லியிருந்தீர்கள். ஆனால், கண்டிப்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும்; எல்லா கம்பெனிகளும் இயங்க வேண்டும். அதேநேரத்தில், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் விதமாக நடவடிக்கை எடுத்து, நிறுவனங்களுக்கான சட்டத் திருத்தங்களை வழங்கி, அந்த நிறுவனம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுக்கும்; அதேநேரம் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும்” என்றார்.

தொடர்ந்து பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.கே. ராஜீவ், “சட்டத்திற்கு உட்பட்டு அனைத்துத் தொழிற்சாலைகளுக்கும் விதிகளைக் கொண்டு வருவோம். நாம் யாருடைய தொழிலையும் பாதிக்கக் கூடாது. சட்டத்திற்கு உட்பட்டு மூன்று மாத காலத்தில் எல்லா நிறுவனங்களுமே மாறி வருகின்றன. அனைத்துப் பணிகளையும் முறையாகச் செய்து வருகிறார்கள். எனவே, நிறைய தொழிற்சாலைகளைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர வேண்டும். மாசு ஏற்படாத வகையில் நாம் இணைந்து நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

ஆனால், இதில் அறிய வேண்டிய உண்மை என்னவென்றால், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜே.கே. டயர்ஸ் நிறுவனத்தின் ஆலை எங்குமே கிடையாது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் தான் ஜே.கே. டயர்ஸ் நிறுவனத்தின் பெரிய உற்பத்தி ஆலை இருக்கிறது. அப்படியென்றால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆலை எது? ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டையில் எம்.ஆர்.எஃப் (MRF Limited) நிறுவனத்தின் மிகப்பெரிய டயர் உற்பத்தி ஆலை அமைந்திருக்கிறது.

இதனைப் பகிர்ந்த இணையவாசிகள், “இது லிஸ்டிலேயே இல்லையே! ராணிப்பேட்டையில் இல்லாத ஜே.கே. டயர்ஸ் ஆலையை இழுத்து மூட வேண்டும் என்று த.வெ.க. எம்.எல்.ஏ. கூறியிருக்கிறாரே!” என்று விமர்சித்து வருகிறார்கள்.

இதுபற்றிக் கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க. மாநில தலைமைச் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, “ராணிப்பேட்டையில் JK Tyre நிறுவனத்திற்கு ஆலையே இல்லை! இல்லாத கம்பெனியை எப்படி இழுத்து மூடுவது? மேலும், இதில் அதிர்ச்சி என்னவெனில், இரு அமைச்சர்கள் இந்த சட்டமன்ற உறுப்பினரின் கேள்விக்குப் பதில் சொன்னதுதான். இன்னும் என்னவெல்லாம் காணப் போகிறோமோ? இறைவா!” என்று விமர்சித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *