எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் சேவை தொடங்குவதற்காக முயன்று வருகிறது. 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்டார்லிங்க் உரிமம் பெற்றிருப்பதாகவும், இந்திய அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கும் எலான் மஸ்க், இந்தியாவில் சேவையைத் தொடங்குவதற்கு இன்னும் ஏன் அனுமதி இல்லை எனக் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், இந்தியாவில் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு பின்னால் பெருநிறுவனங்களின் தலையீடு இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்த மஸ்க், முகேஷ் அம்பானியின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
எலான் மஸ்கின் குற்றச்சாட்டை நிராகரித்த மத்திய தொலைத்தொடர்புத் துறை,“இந்தியாவின் செயற்கைக்கோள் இணையச் சேவைக்கான விதிமுறைகளோ, அவற்றை நடைமுறைப்படுத்தும் முறையோ எந்த நிறுவனத்துக்கும் சாதகமாகவோ பாதகமாகவோ இல்லை” என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் எலான் மஸ்க் தன் எக்ஸ் பக்கத்தில், “மதிப்பிற்குரிய பிரதமர் அம்பானி அவர்களுக்கு, இந்தியாவின் உண்மையான அதிகாரம் உங்களிடம்தான் இருக்கிறது என்பதைத் தாமதமாகப் புரிந்துகொண்டேன். அதற்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.