நேற்று முன்தினம் (அக்டோபர் 12), மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையின்படி,
கடந்த ஆகஸ்ட் மாதம் 4.83 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் பணவீக்கம், செப்டம்பர் மாதம் 5.54 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டைப் பார்த்தால், அது ஆகஸ்ட் மாதம் 5.97 சதவிகிதமாக இருந்துள்ளது. இப்போது 7.74 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் அதிக பணவீக்கத்தைச் சந்தித்த முக்கிய பொருள்கள்… (ஆகஸ்ட் மாத ஒப்பீடு)
> வெங்காயம் 48.78 சதவிகிதத்திலிருந்து 108.09 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
> வெள்ளி நகைகள் 106.81 சதவிகிதத்திலிருந்து 87.80 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

> இஞ்சி 73.82 சதவிகிதத்திலிருந்து 62.85 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
> பூண்டு 43.60 சதவிகிதத்திலிருந்து 54.62 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
> எலுமிச்சைப்பழம் 15.15 சதவிகிதத்திலிருந்து 36.41 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
வெள்ளி நகைகளும், இஞ்சியும் ஆகஸ்ட் மாதத்தை விடக் குறைந்திருந்தாலும், பொதுவாகப் பார்த்தால் பணவீக்கத்தின் அடிப்படையில் உயர்ந்தே உள்ளன.
செப்டம்பர் மாதத்தில் உருளைக்கிழங்கு, தக்காளி, மோட்டர் கார் மற்றும் ஜீப், வெண்டைக்காய், தேங்காய் ஆகியவற்றின் பணவீக்கம் குறைந்துள்ளது.
CPI அறிக்கையில், அதிக பணவீக்கம் கொண்ட டாப் 5 மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் தமிழ்நாடும் (6.81%), அடுத்தடுத்த இடங்களில் ஒடிசா, மத்தியப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகியவையும் இடம்பெற்றிருக்கின்றன.
உணவு அடிப்படையிலான பணவீக்கத்திலும் டாப் 5 இடங்களில் முதல் இடத்தைத் தமிழ்நாடு (10.62%)தான் பெற்றுள்ளது.
அடுத்தடுத்த இடங்களை ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த அறிக்கையில் நாம் கவனிக்க வேண்டியது தமிழ்நாட்டின் பணவீக்க அதிகரிப்பைத்தான்.
இந்த அறிக்கையைத் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மிக முக்கியமாக, அவரது பதிவில் கடந்த ஜனவரி மாதம் 3.36 சதவிகிதமாக இருந்த தமிழ்நாட்டில் பணவீக்கம்,

கடந்த ஜூன் மாதம் 5.24 சதவிகிதம்,
ஜூலை மாதம் 5.44 சதவிகிதம்,
ஆகஸ்ட் மாதம் 5.96 சதவிகிதம்,
செப்டம்பர் மாதம் 6.81 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தற்போதைய பணவீக்கத்தின் அடிப்படையைப் பார்த்தால்…
> இந்த ஆண்டு அக்டோபர் மாதமாகியும் இன்னமும் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மழை சரியாக இல்லை.
இனி எல் நினோ வேறு இருக்கிறது.
> சர்வதேச அளவில் நிலவும் போர்ச் சூழல்களால், கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
இது சரக்குகளைக் கொண்டு சேர்க்கும் போக்குவரத்தின் விலையை இன்னும் அதிகரித்திருக்கிறது.
> சமையல் எண்ணெய், பருப்புகள், பழங்கள், உலர் பழங்கள் போன்றவையும், சோப்பு, ஷாம்பூ போன்ற பொருள்களும் வெளிநாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. வெளிநாடுகளிலும் பணவீக்கம் இருந்து வருகிறது.
மேலும், சர்வதேச சூழல் காரணத்தினால், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது. இதுவும் இறக்குமதி விலையை உயர்த்துகிறது.
ஆகியவைதான் அனைத்துப் பொருள்களின் விலையையும் உயர்த்தி வருகிறது.
இந்தக் காரணங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.

ஆனால், தமிழ்நாடு குறிப்பாக ஏன் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று பார்த்தால், அரசின் செயல்பாடுகளைக் கூறலாம்.
பின்வரும் பாதிப்புகளை முன்னரே கணித்து மாநில அரசு அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால், இதில் தற்போதைய தமிழ்நாடு அரசு சற்று சறுக்கியிருக்கிறது என்றே தெரிகிறது.
உதாரணத்திற்கு, ‘எங்களிடமிருந்து இன்னும் நெல் கொள்முதல் செய்யவில்லை’ என்று பல விவசாயிகள் தொடர்ந்து புகார்களை எழுப்பி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் முக்கிய உணவு அரிசி. அதைக் கொள்முதல் செய்வதில் ஏன் இவ்வளவு அலட்சியம். கொள்முதல் செய்வது தாமதமானால், எப்படி மக்களுக்குத் தேவையான அரிசி அவ்வப்போது கிடைக்கும். சப்ளை குறைவாக இருக்கும்போது, டிமாண்ட் அதிகமாகி, பணவீக்கமும் அதிகரிக்கும் அல்லவா?
அடுத்ததாக, ஏற்கெனவே பயிர் செய்ததைக் கொள்முதல் செய்யவில்லை என்றால், விவசாயிகளுக்கு அடுத்தடுத்துப் பயிர் செய்வது தள்ளிப்போகும். இது இன்னும் பணவீக்கத்தை அதிகரிக்காதா?
பொதுவாகவே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதைத் தாமதப்படுத்தக் கூடாது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு போன்றவை ஏற்கெனவே உள்ள சூழலில், கொள்முதலைத் தாமதப்படுத்துவது நிலைமையை இன்னும் மோசமாக்கும்.
இன்னொரு உதாரணமாக, மின்சாரக் கொள்முதலை எடுத்துக்கொள்ளலாம். இந்த மாதத்திற்கான மின்சாரத் தேவையைத் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்ய இப்போதுதான் குறுகிய கால ஒப்பந்தத்தைப் போட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. அதுவும் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு வாங்க உள்ளது.
தமிழ்நாடு என்பது உற்பத்தி மாநிலம். இந்த மாதத்திற்கான மின்சாரமே இப்போதுதான் கொள்முதல் செய்யப்படுகிறது என்றால், தமிழ்நாட்டின் உற்பத்தித் திறன் நிச்சயம் பாதிக்கும். ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு யூனிட்டுக்கு ரூ.35 என்பது மக்கள் தலையிலேயே வந்து விழும். தமிழ்நாடு அரசே மின்வாரியத்திற்கு இந்தத் தொகையை மானியமாகக் கொடுத்து ஈடு செய்துவிடும் என்கிற நிலைபாட்டை எடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
எது எப்படியாக இருந்தாலும், அதுவும் மக்களின் வரிதான். இங்கேயும் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
உற்பத்தி மாநிலமான தமிழ்நாட்டின் உற்பத்தி பாதிக்கப்படும்போது, இங்கேயும் சப்ளை மற்றும் டிமாண்ட் பாதிக்கப்பட்டு, பணவீக்கம் அதிகரிக்கும்.
நெல் கொள்முதல், மின்சாரக் கொள்முதல் எல்லாம் நமக்குத் தெரிந்த ஒரு சில கோணங்களில் கையளவு. இன்னும் பல உதாரணங்கள் வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்திருக்கிறது… எல் நினோ தாக்கம் இனி அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது… கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு இன்னும் சரியாகவில்லை… இந்திய ரூபாயின் மதிப்பும் சற்றுத் தள்ளாடித்தான் வருகிறது.
இவை இப்போது மட்டுமல்ல… இனிமேலும் பணவீக்கத்தைப் பாதிக்கும். கடந்த நான்கு மாதங்களைப் பாடமாக எடுத்துக்கொண்டு, மைக்ரோ லெவலில் பொருளாதார உயர்விற்கும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்க வேண்டும் தமிழ்நாட்டின் தவெக அரசு.