புதுதில்லி: ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, நிசான் நிறுவனம், இந்தியாவை, ‘மேக்னைட்’ கார் ஏற்றுமதி மையமாக மேம்படுத்த, கூடுதலாக 100 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் உள்நாட்டு விற்பனையை மும்மடங்காக உயர்த்தி 1 லட்சம் யூனிட்டுகளாகவும், அதே எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யவும் நிறுவனம் புதிய தயாரிப்பு, மேம்பாடு மற்றும் கூடுதல் விற்பனை உள்கட்டமைப்பை உருவாக்க நிசான் ஏற்கனவே அறிவித்த 600 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகமாக முதலீடு செய்துள்ளது.
இந்த முதலீட்டின் மூலம் நிசான், மேக்னைட்டின் மாடல் காரின் இடது கை இயக்கி (left hand drive) பதிப்பை உருவாக்க உள்ளது என்றார் நிசான் இந்தியா ஆபரேஷன்ஸ் தலைவரான ஃபிராங்க் டோரஸ்.
ஏற்றுமதி பொறுத்தவரையில், தற்போது 20 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் நிலையில், இனி 65 நாடுகளுக்கு விரிவுபடுத்த உள்ளோம். இதுவே நிசான் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியா உள்ளது என்பதற்கு ஒரு தெளிவான சான்றாகும்.
அடுத்த 30 மாதங்களில் ஐந்து புதிய மாடல்களை வெளியிட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் இரண்டு நடுத்தர அளவிலான எஸ்யூவி (ஐந்து இருக்கைகள் மற்றும் ஏழு இருக்கைகள்) மற்றும் ஒரு மின்சார எஸ்யூவியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
2026 இறுதிக்குள் மின்சார எஸ்யூவியை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். அந்த நேரத்தில் மின்சார கார்களுக்கான தேவை அதிகரிக்கத் தொடங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஹைப்ரிட் தொழில்நுட்பத்தைப் பற்றி கேட்டபோது, உள்நாட்டு சந்தைக்கான ஹைப்ரிட் மற்றும் சிஎன்ஜி உள்ளிட்ட பல்வேறு பவர்டிரெய்ன் டிரான்ஸ்மிஷன்கள் மற்றும் தீர்வுகள் குறித்து நிறுவனம் ஆய்வு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
நிசான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் செளரப் வத்சா கூறுகையில், ’’உள்நாட்டு பயணிகள் வாகன சந்தையில் எங்கள் பங்கை ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் யூனிட்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
எங்கள் சந்தை பங்கு தற்போது 1 சதவிகிதத்திலிருந்து சுமார் 3 சதவிகிதமாக வளரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த நிலையில் 2026 ஆம் நிதியாண்டின் இறுதிக்குள் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி அளவை 1 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது மேக்னைட் காரின் புதிய வெர்ஷனை ரூ.5.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்துள்ளது.