இந்தியாவுக்கு வரும் பாகிஸ்தான் சர்க்கரை.. நிலைமை இந்தளவுக்கு மோசமானது ஏன்? முக்கிய தகவல் | Pakistan Offers Surplus Sugar to India Amid Rising Prices and Import Need, What will happen next

Spread the love

International

oi-Vigneshkumar

டெல்லி: இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே திடீரென சர்க்கரை விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா சர்க்கரையை இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமாக இருப்பதால் பாகிஸ்தானில் இருந்து சர்க்கரை இறக்குமதி செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் இப்போது திடீரென சர்க்கரைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாகவே சர்க்கரை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் சில இடங்களில் சர்க்கரை விலை ரூ.67 வரை போய் இருக்கிறது. அடுத்து பண்டிகை காலம் வரும் நிலையில், சர்க்கரை விலை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

Indial pakistan Sugar

சர்க்கரை இறக்குமதி

இதன் காரணமாக இந்தியாவில் சர்க்கரை இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக இந்தியா சர்க்கரையை இறக்குமதி செய்ய போகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் தனது உபரி சர்க்கரையை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியா 10 லட்சம் மெட்ரிக் டன் கச்சா சர்க்கரையை வரியில்லாமல் இறக்குமதி செய்ய அனுமதித்த சில மணி நேரங்களிலேயே பாகிஸ்தான் சர்க்கரை ஆலைகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசிடம் வலியுறுத்தியுள்ளன.

பாகிஸ்தான் சர்க்கரை

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமாக இருக்கும் சூழலில், இந்த விவகாரம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. பாகிஸ்தான் சர்க்கரை ஆலைகள் தற்போது 12 லட்சம் டன்னுக்கும் அதிகமான உபரி சர்க்கரை கையிருப்பை வைத்துள்ளதாக பாகிஸ்தானைச் சேர்ந்த தி நியூஸ் இன்டர்நேஷனல் செய்தி வெளியிட்டுள்ளது. இதை விற்பனை செய்ய முடியாமல் ஆலைகள் நிதி நெருக்கடியை கொண்டுள்ளது. இதற்கு நடுவே சீக்கிரமே அடுத்த சர்க்கரை பருவம் நவம்பரில் தொடங்க உள்ள நிலையில் புதிய கரும்பை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய பாகிஸ்தான் சர்க்கரை ஆலைகளுக்கு நிதி தேவைப்படுகிறது.

இதனால் இந்திய சந்தை பாகிஸ்தான் சர்க்கரை ஆலைகளுக்கு முக்கிய வாய்ப்பாக தெரிகிறது. மேலும், இந்தியா அருகில் இருப்பதால் போக்குவரத்து செலவும் குறைவாக இருக்கும். சர்க்கரையை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நாட்டுக்கு அந்நிய செலாவணி கிடைப்பதுடன், கிடங்குகளில் தேங்கியுள்ள சர்க்கரையை விற்பனை செய்ய முடியும் என்பது பாகிஸ்தான் சர்க்கரை ஆலைகளின் கணக்கு.

அடுத்து என்ன

ஆனால், அதற்காக உடனடியாக பாகிஸ்தான் சர்க்கரை இந்தியாவுக்கு வரப்போகிறது என்று அர்த்தமில்லை. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான நேரடி வர்த்தகம் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அட்டாரி-வாகா எல்லை மற்றும் விமான போக்குவரத்து உள்ளிட்ட வழக்கமான வர்த்தக முறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பாகிஸ்தானில் இருந்து சர்க்கரை இறக்குமதி செய்ய இரு நாடுகளின் அரசுகளும் தனியாக அனுமதி வழங்க வேண்டும்.

இந்தியாவில் சர்க்கரை விலை உயர்ந்துள்ளதால் இதில் என்ன முடிவெடுக்க போகிறது என்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சர்க்கரையின் சராசரி எக்ஸ்-மில் விலை குவிண்டாலுக்கு சுமார் ரூ.4,000 முதல் ரூ.5,500 வரை உயர்ந்துள்ளது. இதையடுத்து, 10 லட்சம் மெட்ரிக் டன் கச்சா சர்க்கரையை வரியில்லாமல் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. அக்டோபர் 31 வரை இந்த இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் சர்க்கரை கிடைப்பை அதிகரித்து, விலை மேலும் உயர்வதைத் தடுப்பதே இதன் நோக்கம். மேலும், சர்க்கரையை பதுக்கி வைத்து விலையை உயர்த்துவதை தடுக்கவும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

என்ன காரணம்

சர்க்கரை விலை உயர்வால் எத்தனால் திட்டமும் விவாதமாகியுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து, எரிபொருள் பாதுகாப்பை அதிகரிக்க இந்தியா E20 திட்டத்தை வேகமாக செயல்படுத்தி வருகிறது. எத்தனால் உற்பத்திக்கு கரும்பு ரொம்பவே முக்கியம். எத்தனாலுக்காக கரும்பு திருப்பிவிடப்படுவதும் சர்க்கரை விலை உயர்வுக்கு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இருப்பினும், இதை மறுக்கும் மத்திய அரசு, சர்க்கரை பதுக்கல், கரும்பு உற்பத்தி பாதிப்பு இதற்கு காரணம் என கூறியுள்ளது.

அடுத்து பண்டிகை காலம் வரும் நிலையில், சர்க்கரை விலை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் சர்க்கரைக்கு அனுமதி வழங்கப்படலாம் என தெரிகிறது. இந்தியாவின் சர்க்கரை பற்றாக்குறையை சமாளிக்க பாகிஸ்தான் தனது உபரி சர்க்கரையை விற்க ரெடியாக இருக்கிறது. இதனால் இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *