எதுவாக இருந்தாலும் நேரம், காலம் பார்த்து தான் செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். இது கடன் விஷயத்திற்கும் பொருந்தும்.
ஆம்… கடன் விஷயத்தில் நேரம், காலத்தோடு காரணத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார் நிதி ஆலோசகர் விஷ்ணு வரதன்.
“அனைவரும் மனிதர்கள் தான் என்றாலும், ஒவ்வொருவருக்கு ஏற்ப செலவுகள் மாறுபடும்.
சிலர் ஆடம்பர காரைக் கூட எந்தவொரு கடனும் இல்லாமல் வாங்குவார்கள். ஆனால், சிலரோ ரூ.15,000 மொபைல் போனைக் கூட இ.எம்.ஐயில் வாங்குவார்கள்.
‘அது தான் அனைத்திற்கும் லோன் உண்டே… இ.எம்.ஐ கட்டிவிடலாம்’ என்று கடன் வாங்குவதற்கான மைண்ட் செட்டை எப்போதும் வைத்திருக்கக் கூடாது.

அனைத்து செலவுகளுக்கும், பணத் தேவைகளுக்கும் ‘கடன்’ மட்டுமே ஒரு தீர்வு என்று நினைக்காதீர்கள்.
அத்தியாவசியம், அவசரம், எதிர்காலத்தில் பயனுள்ளது ஆகியவற்றிற்கு மட்டும் கடன் வாங்குங்கள். மற்றப்படி கடனுக்கு பெரிய ‘நோ’ சொல்லிவிடுங்கள்.
மேலே சொன்னவற்றிற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.
அத்தியாவசியம் – கல்விச் செலவு, தொழில் விரிவாக்கம்.
அவசரம் – மருத்துவ செலவுகள்
பயனுள்ளது – வீடு வாங்குவது
இதற்கெல்லாம் கடன் வாங்கலாம் என்று வரைமுறை இருப்பதுபோல, கடன் வாங்காமல் இருப்பதற்கு வரைமுறைகள் உண்டு.
ஆடம்பர சாதனங்களுக்கு, ஆடம்பர பயணங்களுக்கு, பட்ஜெட்டை தாண்டிய பிறந்தநாள் பார்டி போன்றவை, லைஃப் ஸ்டைல் அப்கிரேட் ஆகியவற்றிற்கு கடன் வாங்காதீர்கள்.
பாக்கெட்டில் இருந்தால் மட்டும் செலவு செய்யுங்கள். இல்லையென்றால், கொஞ்சம் பொறுமையாக காசு சேர்த்து வைத்து இவற்றை வாங்க அல்லது கொண்டாட பிளான் செய்யுங்கள்.