“இந்த” 5 விஷயங்கள் ரொம்பவே முக்கியம்.. சின்ன தப்பு செய்தாலும் பெரிய பிரச்சினை ஆகிடும்! கவனம் | What are the Top 5 Reasons Health Insurance Claims Get Rejected and How Policyholders Can Avoid Them

Spread the love

Business

oi-Vigneshkumar

சென்னை: இப்போது இளைஞர்கள் பலரும் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆர்வமாக இருக்கும் அதேநேரம் சில விஷயங்களில் நாம் கவனமாகவும் இருக்க வேண்டும். இல்லையென்றால் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்தும் அது பலனே இல்லாமல் போய்விடும்.

இந்த காலத்தில் மருத்துவ பில்லை பார்த்தாலே பலருக்கும் தலை சுற்றிவிடும். எதிர்பாராத வகையில் உடல்நல பிரச்சினைகளால் மருத்துவமனைக்கு சென்றால் அங்கு சிகிச்சைக்கு பிறகு வரும் பில்லை பார்த்தால் இன்னொரு நோயே வந்துவிடும் போல. இதுபோன்ற நிதி சிக்கல்களைத் தவிர்க்கவே பலரும் இன்சூரன்ஸ் எடுக்கிறார்கள். இருப்பினும், அப்படி ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும்போதும் நாம் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

heatlh insurance insurance personal finance

காப்பீட்டு கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதை தவிர்க்க நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஐந்து காரணங்களை இங்கே விரிவாகப் பார்ப்போம்.

தகவல்களை மறைப்பது

பாலிசி எடுக்கும்போது தங்களின் உடல்நிலை குறித்த முழுமையான மற்றும் துல்லியமான விவரங்களை வழங்காததே காப்பீட்டு கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதற்கு மிக முக்கிய காரணமாகும். ஏற்கனவே இருக்கும் நோய்கள், முந்தைய சிகிச்சைகள் அல்லது தங்களுடைய வாழ்க்கை முறை குறித்த கேள்விகளுக்கு உண்மையை சொல்லாமல் மறைப்பது பிற்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.

பாலிசி எடுப்போர் உண்மையை சொல்ல நினைத்தாலும் சில நேரங்களில் புரோகர்கள் நிரப்பி தரும்போதும் இந்த தவறுகள் நேர்கின்றன. எனவே, பாலிசிதாரர்கள் தங்கள் உடல்நிலை குறித்த அனைத்து விவரங்களையும் படிவத்தில் தாங்களாகவே சரிபார்த்து பூர்த்தி செய்வது அவசியமாகும். அப்போது தான் மருத்துவமனையில் அட்மிட் ஆகும்போது பாலிசி ரிஜக்ட் ஆகாது.

காத்திருப்பு காலத்தில் க்ளைம் செய்வது

ஒவ்வொரு ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்திலும் சில குறிப்பிட்ட நோய்கள், மகப்பேறு செலவுகள் அல்லது ஏற்கனவே உள்ள நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு குறிப்பிட்ட காலம் காத்திருப்பு காலம் என்று தனியாக ஒன்று இருக்கும். இந்த காலகட்டம் முடியும் முன்பே க்ளைம் கோரினால் அது நிராகரிக்கப்படும். எனவே, பாலிசி எடுப்பதற்கு முன்பாகவே எந்தெந்த நோய்களுக்கு எவ்வளவு காத்திருப்பு காலம் என்பதை பாலிசி ஆவணத்தில் தெளிவாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். புரோகர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களைச் சொல்ல வாய்ப்பு இருப்பதால் நேரடியாக நீங்களே படித்துத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

குறைந்த பிரீமியம்

பெரும்பாலான மக்கள் குறைந்த பிரீமியம் கொண்ட பாலிசிகளை மட்டுமே தேர்வு செய்ய விரும்புகின்றனர். ஆனால், இந்த பாலிசிகளில் சில சிக்கல் இருக்கலாம். உதாரணமாக நீங்கள் 20 லட்ச ரூபாய்க்கு காப்பீடு எடுத்தாலும் குறிப்பிட்ட நோய்க்கு ரூ.2 லட்சம் தான் லிமிட் என்பார்கள். நீங்கள் அந்த குறிப்பிட்ட பாதிப்பிற்காக மருத்துவமனையில் அட்மிட் ஆனால்.. எவ்வளவு செலவானாலும் ரூ.2 லட்சம் தான் க்ளைம் வரும். அதேபோல கோ-பே (பில் தொகையில் குறிப்பிட்ட தொகையை நீங்களே செலுத்த வேண்டும்) போன்ற விதிகள் மற்றும் நீண்ட காத்திருப்பு காலங்கள் இருக்கக்கூடும்.

பிரீமியக் கட்டணத்தை விட பாலிசியில் என்னென்ன சலுகைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன என்பதை ஆராய்ந்து, நமது தேவைக்கேற்ற சிறந்த பாலிசியை தேர்வு செய்வதே பிற்காலத்தில் க்ளைம் செய்யும்போது சிரமம் ஏற்படாமல் இருக்க உதவும்.

முறையான ஆவணங்கள்

சிகிச்சைக்கான ஆவணங்களை அரைகுறையாகவோ அல்லது தவறாகவோ சமர்ப்பிக்கும்போது கோரிக்கைகள் நிராகரிக்கப்படலாம். டிஸ்சார்ஜ் சம்மரி, மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் மற்றும் பில் போன்றவற்றை முறையாகப் பாதுகாத்துச் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக, ரீஇம்பர்ஸ்மென்ட் எனப்படும் பணத்தை நாம் முதலில் செலுத்திவிட்டு திரும்பப்பெறும் முறையில் முறையான ஆவணங்கள் நிச்சயம் தேவை! ஆவணங்களை சமர்ப்பிக்கும்போது அதில் திருத்தங்களோ, அடித்தல் திருத்தங்களோ இருக்க கூடாது. அவ்வாறு இருந்தால் காப்பீட்டு நிறுவனங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு, தாமதம் உண்டாகும்.

முக்கியம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விவரத்தைக் காப்பீட்டு நிறுவனத்திற்கு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சை, எதிர்பாராத அவசர சிகிச்சை என எதுவாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். ரீஇம்பர்ஸ்மென்ட் முறையில் ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும் குறிப்பிட்ட கால வரம்பு இருக்கும். இந்த காலக்கெடுவை மீறும்போது கோரிக்கைகள் நிராகரிக்கப்படலாம். எனவே, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இதைச் செய்வதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் விதிகளைத் தெளிவாகப் புரிந்துகொள்வதே நம்மைக் காக்கும் அரணாகும். காப்பீட்டு நிறுவனங்கள் நியாயமான காரணமின்றி எந்தவொரு கோரிக்கையையும் நிராகரிக்க முடியாது. ஒருவேளை உங்கள் கோரிக்கை தவறாக நிராகரிக்கப்பட்டதாக நீங்கள் கருதினால், காப்பீட்டு குறைதீர்ப்பாளர் (Insurance Ombudsman) மற்றும் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகித் தீர்வு பெறலாம்.

இது சாதாரண செய்தி மட்டுமே.. இதை நிச்சயம் பொருளாதார ஆலோசனையாக கருதக்கூடாது. எனவே, உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை பெற்று தேவையான முடிவுகளை எடுக்க வேண்டும்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *