இந்த உலகில் எத்தனை முறை சொன்னாலும் நன்றியும் மன்னிப்பும் எப்படி இனித்துக் கொண்டே இருக்குமோ அதேபோலத்தான் காதலும்! காதலை யார் சொன்னாலும் எப்படிச் சொன்னாலும் தாளம் தப்பாமல், நமக்குள் வந்து இசைபட வாழவைக்கும்.
‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் எல்லாப் பாடல்களும் எல்லோருக்கும் பிடிக்கும் என்றாலும் குள்ள கமல் தன் காதலின் வலியைச் சொன்ன ‘உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்’ பாடல், இன்னும் ஆழமாக ஊடுருவியது நமக்குள்! பாடலின் வரியையே படத்தின் தலைப்பாக வைத்த படங்களில், ‘உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்’ பாடலும் உண்டு. கார்த்திக், மோனிஷா முதலானோர் நடித்த இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் அமுதசுரபியாகக் கொடுத்திருந்தார் இசைஞானி இளையராஜா. அந்தப் பாடல்களில் ஒன்றுதான் ‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி எனக்குச் சொல்லடி’ என்ற பாட்டு!
இந்தப் பாடலை பிறைசூடன் எழுதினார். எஸ்பிபியும் ஸ்வர்ணலதாவும் பாடினார்கள். வயல்வெளிகளில், மரங்களுக்கிடையில் என இந்தப் பாட்டு, படமாக்கிய விதமும் நம் மனசையும் அள்ளிவிடும், இந்தப் பாடலைப் போலவே! வரிகளும் கார்த்திக்கின் ஸ்டைலான அழகும் மோனிஷாவின் பேசும் கண்களும் இந்தப் பாடலின் பலம். அதுபோல, கொஞ்சிக்கொஞ்சிப் பாடுகிற எஸ்பிபியும் குழைந்து குழைந்து காதல் பேசுகிற ஸ்வர்ணலதாவும் கூடுதல் பலம். முக்கியமாக, இந்தப் பாடலின் தாளமும் பாடலினூடாக வந்துகொண்டே இருக்கிற இசையும் நம்மை காதல் கட்டுக்குள்ளும் இசையின் கட்டுமானத்துக்குள்ளும் அப்படியே கட்டிப்போட்டுவிடும்.
ஆ ஆ ஆ அ ஆ ஆ ஆ ஆ
ஆ அ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
எனும் ஹம்மிங்கில் இருந்து இளையராஜா தன் முத்திரையைப் பதிக்கத் தொடங்கிவிடுவார். இந்தப் பாடலின் எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் இசையைப் பிரித்து, ‘இது யாரு போட்ட இசை?’ என்று கேட்டால் இளையராஜா என்று அட்சரம் பிசகாமல் எல்லோருமே சொல்லிவிடுவோம். ‘சிக்னேச்சர்’ என்று இன்றைக்கு சொல்லுகிற அந்த முத்திரையை, பாடல் முழுக்கவே தந்திருப்பார் இசைஞானி.
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட
கண்ணன் ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி
அன்பே ஓடி வா
அன்பால் கூட வா
ஓ பைங்கிளி நிதமும்
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி
அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி, பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி… என்கிற வார்த்தைகள், அந்தத் தாளக்கட்டுக்குத் தகுந்தது போலவே எழுதப்பட்டிருக்கும். குறிப்பாக, ‘அன்பே ஓடிவா அன்பால் கூட வா ஓ பைங்கிளி’ என்கிற மெட்டும் வரியும் அடிக்கடி தனியே எடுத்து எல்லோரும் அனுபவித்து முணுமுணுக்கிறதை, குதூகலத்துடன் பாடுவதைக் கேட்டிருக்கிறேன். நானே பாடியும் இருக்கிறேன்.
இதையடுத்துதான் வார்த்தைகளுக்கு வலிக்காமல் மெட்டுப் போட்டு, மொட்டுமொட்டாக அவிழ்த்து மணம் பரப்புகிற இசையைக் கோர்த்திருப்பார் இளையராஜா.
சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம்
சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும்
பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்
பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்துவிடு
என்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்துவிடு
அன்பே ஓடி வா
அன்பால் கூட வா
அன்பே ஓடி வா
அன்பால் கூட வா
ஓ பைங்கிளி நிதமும்…
என்று ஸ்வர்ணலதா, தன் குரலால் காதலின் உன்னதத்தை உணர்த்திக்கொண்டே இருப்பார். சொந்தம்பந்தம், சொர்க்கம் சொர்க்கம், பொன்னிபொன்னி என்று சொல்லுகிற வேளையில், தாலாட்டும் தருணம், சீராட்ட வரணும், நீராட வரணும், நீ ஆள வரணும் என்று இளமைக் குறும்புடன் பிறைசூடன் எழுதியிருப்பார். இந்திர ஜாலம் தர வந்துவிடு, மன்மத பாணத்தை கண்டு கொஞ்சம் காப்பாற்றித் தந்துவிடு என்று காமம் சேர்த்திருப்பார். ஆனால், பாடலைப் படமாக்கியவிதத்தில் காமமெல்லாம் இருக்காது. அப்படியே காமம் இருந்திருந்தாலும் கார்த்திக், மோனிஷா ஜோடியின் காதல், அதை நமக்கு மறைத்துவிடும்.
’ஓ பைங்கிளி நிதமும்…’ என்று ஸ்வர்ணலதா பாடிவிட்டு, ‘என்னைத் தொட்டு..’ என்று பாடும்போதே, எஸ்பிபி, ‘உன்னைத் தொட்டு… என்னைத் தொட்டு…’ என்று பாடத் தொடங்கிவிடுவார். இது காதலில் ஓரழகுதான்; இசையில் பேரழகுதான்!
என்னைத் தொட்டு
நெஞ்சைத் தொட்டு
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட
நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி
இப்போது ஹம்மிங் எஸ்பிபிக்கு! சாதாரணமாகவே ‘காட்டுகாட்டு’ என்று ஹம்மிங்கில் வித்தைகள் செய்யும் எஸ்பிபி, இந்த இடத்தில் விளையாடிவிடுவார்.
ஆ ஆ ஆ அ ஆ ஆ ஆ ஆ
ஆ அ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே
மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே
கண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே
கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே
அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணை கட்டி வைத்த பைங்கிளியே
என்னில் நீயடி
உன்னில் நானடி
என்னில் நீயடி
உன்னில் நானடி
ஓ பைங்கிளி நிதமும்
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட
நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி
அன்பே ஓடி வா
அன்பால் கூட வா
ஓ பைங்கிளி நிதமும்
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி
பாடல் இன்றைக்கும் இளமையாக இருப்பதற்கு இளையராஜாவின் இசை பெருங்காரணம். பாடலில் தபேலாவையும் புல்லாங்குழலையும் ஜோடிபோட்டு பேசவிட்டிருப்பார். அதிலும் என்னில் நீயடி என்று சொன்னதும் ஒரு குழலோசை பதில், உன்னில் நானடி என்று பாடும்போது குழலிசை பதில் என்று ராஜவித்தைகள் மொத்தத்தையும் இதில் பதித்திருப்பார் இளையராஜா. கூடவே குழலுக்கும் தபேலாவுக்குமான காதல் பேச்சுக்குச் சாட்சியாக, வயலினும் நைஸாக பின் தொடர்ந்துகொண்டே இருக்கும்!
இந்தப் பாடல் நம் செவிகளுக்குக் கிடைத்த நாள் முதலாக, இந்தப் பாட்டுக்கு அடிமையாகிப்போனவர்களில் நானும் ஒருவன். இன்கம்டாக்ஸ் ரெய்டெல்லாம் நடப்பதுபோல், திடீரென எங்கள் வீட்டுக்கு வந்து, டிவியை ‘ஆன்’ செய்து, ரிமோட்டைத் தொட்டு, ‘லைப்ரரி’க்குச் சென்றால், ‘என்னைத் தொட்டு’ என்று ஸ்வர்ணலதா கொஞ்சுவார். ‘மங்கை பேரும் என்னடி எனக்குச் சொல்லடி’ என்று எஸ்பிபி கேள்வி எழுப்புவார். ‘அன்பே ஓடிவா அன்பால் கூட வா, ஓபைங்கிளி’ என்று பாடல் ஒலிக்கும். இன்றைக்கு வரை என் ரகசியக் காதலி போல்தான் இந்தப் பாட்டு. ஆனால் மொத்தக் குடும்பமும் இந்தப் பாட்டுக்கு அடிமை.
தினமும் பல் துலக்குவது போல, டிபன் சாப்பிடுவது போல, ஒரு குட்டித்தூக்கம் போடுவது போல, அன்றாடப் பணிகளைச் செய்வது போல, எனக்குத் தோன்றும்போதெல்லாம் ‘சொந்தம் பந்தம் என்னைத் தாலாட்டும் தருணம் சொர்க்கம் சொர்க்கம் என்னைச் சீராட்ட வரணும்’ என்கிற பாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். ’என்னப்பா டல்லாருக்கே… பத்து பர்செண்ட் சார்ஜ்தான் இருக்குபோல! இப்பப் பாரு… உனக்கு சார்ஜ் ஃபுல்லாயிரும்’ என்று என் மகனோ மகளோ மனைவியோ… ‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி விஷயம் என்னடி எனக்குச் சொல்லடி’ என்ற பாடலைப் போட்டுவிடுவார்கள்.
கார்த்திக், மோனிஷாவை விட அதிக சந்தோஷத்திலும் நிறைவிலுமாக நான் இருப்பேன். ‘இப்படிலாம் பாட்டுப் போட இளையராஜாவை விட்டா யாருய்யா இருக்கா?’ என்று சொல்வதற்கு ஆயிரமாயிரம் பாடல்கள் இருக்கின்றன. அந்த ஆயிரத்தில் இந்தப் பாடலும் உண்டு!

