40 வயதைக் கடந்த பெற்றோரா நீங்கள்? உங்களுக்கு நல்ல வேலையும், கைநிறைய சம்பளமும் இருக்கலாம். ஆனால், இரவு தூங்கும்போது மனதிற்குள் ஒரு சின்ன பயம் எட்டிப் பார்க்கும். அது பணமில்லாததால் வரும் பயம் அல்ல. குழந்தையின் கல்விக்கு முறையான “திட்டம்’ இல்லையே என்ற பயம்!
பணம் ஒரு பிரச்னையா?
கைநிறைய சம்பாதிப்பது வேறு; அதைச் சரியான இலக்கிற்காகத் திட்டமிடுவது வேறு. ஒவ்வோர் ஆண்டும் பள்ளி திறக்கும்போது, எங்கிருந்தாவது பணத்தைப் புரட்டுகிறீர்கள் அல்லது உங்கள் வங்கிச் சேமிப்பை உடைக்கிறீர்கள்.
இது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் கல்லூரிப் படிப்பு. அது இன்னும் வெகு தொலைவில் இருப்பதாக நீங்கள் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் காலேஜ் ஃபார்ம் வாங்க வேண்டி வரும்.
இந்த அலட்சியம் எப்படி உங்கள் குழந்தையை அழிக்கும்?
இந்தத் திட்டமின்மையால் என்ன நடக்கும் தெரியுமா? உங்கள் குழந்தைக்குத் திறமை இருக்கும். அவர்கள் விரும்பிய ஒரு மிகச்சிறந்த கல்லூரியில் இடமும் கிடைக்கும். ஆனால், அந்த சீட்டைக் கையில் வாங்கும்போது, பல லட்சங்கள் கொண்ட அதன் கட்டணத்தைப் பார்த்து நீங்கள் ஒரு நிமிடம் தயங்குவீர்கள். “இது கொஞ்சம் காஸ்ட்லி, வேற காலேஜ் பாக்கலாமா?” எனப் பின்வாங்குவீர்கள்.
ஒரு நல்ல அப்பாவாக / அம்மாவாக இருந்தும், திட்டமிடாத அந்த ஒரு காரணத்தால் உங்கள் குழந்தையின் மிகப்பெரிய கனவை நீங்களே உடைப்பீர்கள். “பணம் இருந்தும் என் குழந்தைக்கு அதைச் செய்ய முடியவில்லையே” என்ற குற்ற உணர்ச்சி வாழ்நாள் முழுவதும் உங்களை உறுத்தும். இதுதான் நிஜம்.
கல்விக் கடன் வாங்கப் போறீங்களா?
கல்விக் கடன் என்பது உதவி போலத் தெரியலாம்; ஆனால் அது உங்கள் குழந்தையின் முதல் சம்பளத்தில் விழும் பெருஞ்சுமை. உதாரணமாக, ₹20 லட்சம் கடனை 11% வட்டியில் வாங்கி 7 ஆண்டுகளில் அடைத்தால், அசலோடு சேர்த்து வட்டியாக மட்டும் கூடுதலாக ₹8.5 லட்சத்தை வங்கிக்கு அழுவீர்கள். படித்து முடித்ததும் குழந்தையை EMI வலையில் சிக்க வைக்கப் போகிறீர்களா? யோசித்துக்கொள்ளுங்கள்!
இதற்கான தீர்வு பள்ளிக் கட்டணத்திற்கும், கல்லூரிக் கட்டணத்திற்கும் தனித்தனித் திட்டம் தீட்டுவது மட்டுமே அமைதியான வழியைத் தரும்.
1. பள்ளிக் கட்டணத் திட்டம் (Short-term):
பள்ளிக் கட்டணம் என்பது அடுத்த ஆண்டே வரப்போகும் செலவு. இங்கு பங்குச்சந்தை ரிஸ்க் எடுக்கக் கூடாது. உங்கள் குழந்தையின் ஓராண்டு பள்ளிச் செலவு (Fees, Books, Bus Fees) மொத்தம் ₹1 லட்சம் என வைத்துக்கொள்வோம். இதை மொத்தமாகத் தேடாதீர்கள்.
மாதம் ₹8,000 வீதம் ஒரு ரெக்கரிங் டெபாசிட் (RD) அல்லது கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் (Debt Fund) சேமியுங்கள். அடுத்த ஆண்டுக்கான பள்ளிக் கட்டணம் எந்த டென்ஷனும் இல்லாமல் கையில் இருக்கும். மேலும் பிற தேவைகளுக்காக இதில் இருக்கும் பணத்தைத் தொடாமல் இருக்கும் ஒழுக்கமும் வளரும்.
2. கல்லூரிக் கட்டணத் திட்டம் (Long-term):
கல்லூரிக் கட்டணம் என்பது நீண்ட கால இலக்கு. இங்கு பணவீக்கத்தைத் தாண்டி வளரும் முதலீடு தேவை. உங்கள் குழந்தைக்கு இப்போது 10 வயது என வைத்துக்கொள்வோம். 18 வயதில் கல்லூரி செல்ல வேண்டும். இன்று ஒரு நல்ல பட்டப்படிப்பிற்கு ₹15 லட்சம் ஆகிறது என்றால், 8 ஆண்டுகளில் கல்விக் கட்டண பணவீக்கத்தால் அதன் செலவு தோராயமாக ₹28 லட்சமாக மாறும்.
இந்த ₹28 லட்சத்தை எப்படி அடைவது? மாதம் ₹17,000 வீதம் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் (Equity Funds) SIP முறையில் முதலீடு செய்யுங்கள் (12% லாப எதிர்பார்ப்பு). 8 ஆண்டுகளில் அந்தப் பணம் வளர்ந்து உங்கள் கையில் இருக்கும்.
நிறைவாக…
நாம் எதைப் பற்றி கவலைப்படுகிறோம் என்பதுதான் நமது வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிக்கிறது. எனவே, உங்கள் குழந்தையின் கல்விக்காகக் கவலைப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. உங்கள் இலக்கை அறிந்து திட்டமிட்டால் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக மாறும்.
நாளை உங்கள் குழந்தை, “நான் அந்தக் காலேஜ்ல படிக்கவா?” என்று கேட்கும்போது, நீங்கள் கட்டணத்தைப் பார்த்துப் பயப்படக் கூடாது. பெருமையோடு “தாராளமா படிப்பா!” என்று சொல்லும் அந்தக் கம்பீரம்தான் நீங்கள் செய்த முதலீட்டின் உண்மையான வெற்றி. எனவே, பணத்தை உங்களுக்காக வேலை செய்ய விடுங்கள்.
உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை திட்டமிட தெரியவில்லையா? உங்களுக்காக ஒரு வகுப்பு!
