வேலூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில், காட்பாடியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார். மனுவில் அவர், “நான் தனியார் கல்லூரியில் பயின்று வருகிறேன். எனக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தங்கராஜ் என்ற இளைஞன் அறிமுகமானார். அவர் என்னிடம் நட்பாக பழகி உதவி கேட்டதால், முப்பதாயிரம் ரூபாய் கொடுத்தேன்.
இந்த நிலையில், என்னை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தி வந்தார். நான் திருமணத்துக்கு மறுத்ததால், என்னிடம் ஆபாசமாக பேசினார். இதையடுத்து, அவருடன் பழகுவதை நிறுத்திவிட்டேன். நான் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டபோது, என்னையும், என் குடும்பத்தாரையும் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுக்கிறார்.

மேலும், நான் அவருடன் நெருக்கமாக இருப்பதுபோன்ற படத்தை ஆபாசமாகச் சித்தரித்து, சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு மிரட்டி வருகிறார். இதனால், கல்லூரிக்குச் செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இதுபற்றி, காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். போலீஸார் அந்த நபரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறிவிட்டனர்.
ஆனால், அவர் என்னை தொடர்புகொள்ள முயல்கிறார். அவரிடம் உள்ள போலியாகச் சித்தரிக்கப்பட்ட படத்தை அழித்து, பணத்தை மீட்டுத்தரவதோடு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியுள்ளார். மாணவியின் இந்த புகார்மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.