செங்கல்பட்டில் நேற்று(அக்.31) அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “‘தற்போதைய ஆட்சியில் மின்சாரம் எப்போது வரும் எப்போது போகும் என்றே தெரியாத ஒரு அவல நிலை நீடித்து வருகிறது. மின்சாரத்தை தொட்டால்தான் கடந்த காலங்களில் மக்களுக்கு ஷாக் அடிக்கும். ஆனால் இந்த ஆட்சியில் மின்கட்டணத்தைக் கேட்டாலே மக்களுக்குத் தூக்கிவாரிப் போடும் அளவிற்கு ஷாக் அடிக்கிறது.

நான் பேசி முடிக்கிற வரைக்குமாவது இந்த ஆட்சியில் மின்சாரம் தடைப்படாமல் இருக்க வேண்டும். நமது மாவட்டச் செயலாளர் மிகவும் உஷாராக இருக்கிறார். இந்தத் தறிகெட்ட ஆட்சியைப் பற்றி நன்றாகத் தெரிந்ததால், எதற்கும் எச்சரிக்கையாக இருக்கட்டும் என்று சொந்தமாக ஜெனரேட்டர் வசதி செய்து வைத்துள்ளார்.
மக்கள் நிம்மதி வேண்டி இறைவனைப் பிரார்த்திக்கச் சென்ற இடத்தில் கூட மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் நாட்டின் துணை குடியரசுத் தலைவர் கோவிலுக்குச் சென்றபோது கூட இரண்டு முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.