இந்திய அரசியலில் மாநிலக் கட்சியாக இருந்தாலும், தேசிய அளவிலான முடிவுகளைத் தீர்மானிப்பதில் திமுக எப்போதும் ஒரு முக்கிய காரணியாகவே திகழ்ந்து வருகிறது.
குறிப்பாக, அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட “இந்தியா’ கூட்டணியில் திமுகவும், அதன் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மிக முக்கியமான தூண்களாகச் செயல்பட்டனர்.
கொள்கை ரீதியாகவும் பாராளுமன்றத்திலும் பாஜக-வுக்கு எதிரான உரத்த குரலாகத் திகழ்ந்த திமுக, தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் முதன்மைச் சக்தியாகப் பார்க்கப்பட்டது.
இருப்பினும், சமீபத்திய தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில அரசியல் சூழல் தலைகீழாக மாறியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிடுமா?
தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே, காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து அதிகாரபூர்வமாக இணைந்தது.
இடையில் எழுந்த அரசியல் அதிர்வலைகளால், ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்களை திமுக புறக்கணிக்கத் தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக, நேற்று (ஆகஸ்ட் 14) சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில் திமுக எம்.பி கனிமொழி பங்கேற்றதும், “நாங்கள் இந்தியா கூட்டணியில் இல்லை” என்று அவர் வெளிப்படையாக அறிவித்ததும் விவாதத்தக் கிளப்பி இருக்கிறது.
‘இந்தியா’ கூட்டணியில் இருந்து விலகிய சூழலில், வரவிருக்கும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிடுமா? அல்லது புதிய மூன்றாவது அணியை உருவாக்குமா? அல்லது பாஜகவுடன் கைக்கோக்குமா? ஆகிய கேள்விகளுடன் பத்திரிகையாளர் சுவாமிநாதனைத் தொடர்கொண்டு பேசினோம்.