2005-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட சட்டம்’ நூறு சதவீதம் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாக, புதிதாக ‘பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புச் சட்ட மசோதாவை’ (விபி-ஜி ராம் ஜி) மத்திய அரசு கொண்டுவந்தது.
இந்த மசோதாவின் மூலம், இந்த திட்டத்துக்கான நிதிச் சுமையை மாநில அரசுகளுடன் 60-40 என்ற சதவீதத்தில் மத்திய அரசு பகிா்ந்துகொள்ளும் வகையில் நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை 100 நாள்களாக இருந்த வேலை நாள்கள், இனி 125 நாள்களாக உயா்த்தப்பட உள்ளது. இந்த மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டு புதன்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயா் நீக்கம் மற்றும் மசோதாவின் அம்சங்களைக் கண்டித்து, அறிமுக நிலையிலேயே எதிா்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன. இந்த மசோதா, கிராம சபைகளின் உரிமையைப் பறிப்பதுடன், மாநிலங்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை உருவாக்குகிறது. இந்த திட்டம் ஏழைகள் விரோத, தலித் விரோத நடவடிக்கை என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.