"இளைஞர்களின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவித்ததே நீங்கள் தான்" – மோடி vs ராகுல், கார்கே

Spread the love

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு பதிலளிக்கும் விதமாக இன்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்…

“நமது இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை விட முக்கியமானது வேறொன்றும் இல்லை!

 பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய, விரைவு நீதிமன்றங்களை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

இது தொடர்பாகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் எடுத்துவரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.

நமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்க முயற்சிப்பவர்கள் எவரும் தப்பவிடப்பட மாட்டார்கள்”. எனக் குறிப்பிட்டிருந்தார்.

மோடியின் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில்…

“நமது இளைஞர்களின் எதிர்காலத்திற்கு அதிகளவில் தீங்கு விளைவித்தது நீங்கள் தான்.

நமது கல்வி முறையை முழுமையாகக் கைப்பற்றி சீரழிப்பதற்கு நீங்கள் அனுமதித்ததோடு ஊக்கமும் அளித்தீர்கள். மேலும் இதற்குப் பொறுப்பான ஒவ்வொருவரையும் பாதுகாத்தீர்கள்.

மாணவர்களின் கோரிக்கைகள் மிகத் தெளிவானவை:

1. தர்மேந்திர பிரதானை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

2. மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

3. அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி
காங்கிரஸ் ராகுல் காந்தி

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது…

“உங்கள் ஆட்சிக் காலத்தில் கல்வி முறை முற்றிலும் சீர்குலைந்து போய்விட்டது. எங்களுக்கு போலி ஆறுதல்களோ அல்லது அரைகுறை அறிவிப்புகளோ தேவையில்லை.

உங்களது அரசாங்கம் இளைஞர்கள் மீது லத்தி சார்ஜ் நடத்தியது; பெல்லட் துப்பாக்கிகள், ஷாக் லத்திகளைப் பயன்படுத்தி, அவர்கள் நம் சொந்தக் குழந்தைகள் இல்லை என்பதைப் போல எவ்வித அச்சமுமின்றி கொடூரத் தாக்குதல்களை அவிழ்த்துவிட்டது.

உங்கள் குளிரூட்டப்பட்ட சொகுசு மாளிகைகளை விட்டு வெளியே வந்து, உங்களது சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடி வீதிகளில் ரத்தம் சிந்திய இளைஞர்களின் கண்களை நேருக்கு நேராகப் பாருங்கள்.

இளைஞர்கள் நிறைவேற்றக் கோரும் 3 எளிய கோரிக்கைகள் இவைதான்:

1. கல்வி அமைச்சர் பிரதானை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

2. அடக்குமுறை நடவடிக்கைகள் மற்றும் கொடுமைகளுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

3. உங்களால் குறிவைத்துத் தாக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாட்டின் கல்வி முறையை முழுமையாகக் கைப்பற்றிவிட்டது. இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் 29% ஆக விண்ணை முட்டுகிறது. தனியார் வேலைவாய்ப்புகள் இல்லை; சொற்ப அளவிலான நிரந்தர அரசுப் பணிகளே உள்ளன; தற்காலிகப் பணி ஒப்பந்த முறை உச்சத்தில் இருக்கிறது. அனைத்துக் கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டன.

தங்களது எதிர்காலத்திற்கான உரிமையைக் கேட்க இந்த இளைஞர்கள் வேறு எங்கே தான் போவார்கள்?”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *