International
oi-Prasanna Venkatesh
அமெரிக்காவும் ஈரானும் இடையே எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் டிரம்ப்-க்கு வந்தாச்சு. இந்த அமைதி ஒப்பந்தத்தில், இஸ்ரேல் படைகளை லெபனானின் தெற்குப் பகுதியிலிருந்து முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற விதியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
இப்படி ஒவ்வொரு முறையும் அமெரிக்கா – ஈரான் மத்தியில் அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் போதும் இஸ்ரேல், இதை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா இஸ்ரேலை மொத்தமாக கழற்றி விட வேண்டும் என முக்கியமான கருத்து வெடித்துள்ளது.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ராணுவ மற்றும் உளவுத்துறை உதவிகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க அதிகாரி ஜோ கென்ட் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை மூலம் அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தம் நீண்டகாலம் நிலைநிறுத்த உதவும் என்று அவர் கருதுகிறார்.
ஜோ கென்ட்டின் எச்சரிக்கை
அமெரிக்க தேசிய எதிர்ப்பு பயங்கரவாத மையத்தின் முன்னாள் தலைவராக இருந்த ஜோ கென்ட், அமெரிக்கா – ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளார். ஆனால், இந்த ஒப்பந்தம் நீடிக்க வேண்டுமானால், இஸ்ரேலுக்கு அமெரிக்கா அளிக்கும் ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் இந்த அமைதி ஒப்பந்தத்தை முறியடிக்க எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தியதாகவும், எதிர்காலத்திலும் இதை செய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க படைகளை விலக்க வேண்டும்
மேலும், ஈரான் தாக்கக்கூடிய வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க தளங்களிலிருந்து அமெரிக்க படைகளை அமைதியாக வெளியேற்ற வேண்டும் என்றும் ஜோ கென்ட் பரிந்துரைத்துள்ளார். இதன் மூலம், ஈரானின் ஆதரவு அமைப்புகள் அமெரிக்காவை மீண்டும் போரில் இழுத்து விடும் வாய்ப்பை தடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை, அமெரிக்காவை இஸ்ரேல் அல்லது ஈரானின் நிபந்தனைகளுக்கு உட்படுத்தாமல் பாதுகாக்க உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமைதி ஒப்பந்தத்தை பாதுகாக்கும் முயற்சி
ஜோ கென்ட், அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காரணிகளையும் ஒப்பந்தத்திற்கு சாதகமாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதன்மூலம், அமெரிக்கா மீண்டும் போரில் சிக்கி விடாமல் தடுக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.
இந்த அறிவுறுத்தல்கள், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமைதி ஒப்பந்தத்தை நிலைநிறுத்துவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை பற்றிய விவாதங்களை தூண்டியுள்ளன. இந்த நிலையில் அமெரிக்கா அமெரிக்க அரசும், டிரம்ப்-ம் இஸ்ரேல் மீது எத்தகைய நடவடிக்கையை எடுக்கப்போகிறது என்பது தான் தற்போதைய முக்கியமான கேள்வியாகும்.
மேலும் அமெரிக்கா இந்த போருக்காக இஸ்ரேலுக்கு பணமாகவும், ஆயுதமாகவும், பல பில்லியன் டாலர் தொகையை கடனாக கொடுத்துள்ளது. இந்த அமைதி பேச்சுவார்த்தையின் போது இதுவும் பெரிய விவாதமாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த அமைதி ஒப்பந்தம் நீண்டகாலம் நீடிக்க வேண்டுமானால், அமெரிக்கா இஸ்ரேலுடனான தனது உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.