வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
ஒரு மலை அருகில் அழகிய கிராமம் இருந்தது, அக்கிராமத்தில் ஏழு வகையான தெருக்கள் காணப்பட்டன! அதில் குடிசை முதல் மொட்டமாடி என இருநூறு வீடுகள் இருந்தது. அக்கிராமத்தைச் சுற்றி பசுமையான வயல்வெளிகள், கிணறுகள், குளம், ஆறு என இயற்கை வளம் மிகுந்து காணப்பட்டது மற்றும் வெளியூர் சென்று வர பேருந்து போக்குவரத்து வசதி இருந்தது.
அக்கிராமத்தில் உள்ள மக்கள் வெவ்வேறு சமூகம் மற்றும் மதம் சார்ந்தவர்கள், ஆனாலும் ஒன்றுக் கூடி வாழ்ந்து வந்தனர்! எப்படியெனில் அங்குள்ள மக்களின் குழந்தைகள் சிறு வயது பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை இணைந்து படித்தனர்!
பின் அங்குள்ள வயல்வெளிகளில் நாற்று நடுதல், களை எடுத்தல், அருப்பு, உள்ளூர் கடைகளில் பொருட்கள் வாங்குவது ஆகிய வேலைகளில் அனைத்து மக்களின் பங்கு காணப்பட்டது. அது மட்டுமில்லாமல் கிராமத்தின் வெவ்வேறு மதக் கோவிலின் திருவிழாக்களில் அனைவரும் ஒன்றுக் கூடி சிறப்புச் செய்வர். அவ்விடம் மலையும் மலைச் சார்ந்த இடமென்பதால் ஆடு, மாடு, கோழி, மீன்,பன்றி வளர்ப்பு மற்றும் வேட்டை முறை காணப்பட்டது.
வாரச் சந்தைக்களில் காய்கறி, தானியங்கள் விற்பனை மற்றும் பண்ட பரிமாற்றத்தில் அனைத்து மக்களின் ஒத்துழைப்பு இருந்தது. இரவு நேரங்களில் கிராமத்துப் பெரியவர்கள் அங்குள்ள இளைஞர்களின் கபடி, கொ-கொ, கண்ணாமூச்சி விளையாட்டுக்களைப் பார்த்து ரசித்து, அறிவுக்கேற்ற கதைக்களைக் கூறி வந்தனர்.
கிராம மக்கள் இன்ப நிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகளில் பங்குப் பெற்றனர்! மக்களின் வாழ்க்கை முறை இயற்கையோடு இயற்கையாய் சென்றது, சில இளைஞர்கள் வேலை கிடைத்து வெளியூர் பட்டணத்திற்கு சென்றனர், இன்னும் சில இளைஞர்கள் அக்கிராமத்தில் சிறு தொழில் செய்தனர். இப்படியே அன்றாட வாழ்க்கைக்கான செல்வமும், பணமும் கிடைத்தது. வெளியூர் சென்ற இளைஞர்களிடம் அவ்வப்போது கிராமத்திலுள்ள அவர்களின் பெற்றோர்களும், நண்பர்களும் போனிலும், தபால் கடிதத்திலும் தொடர்புக் கொண்டு பேசி வந்தனர்.