உதயநிதி கையில் எடுத்த சீக்ரெட் பிளான்.. இடைத்தேர்தலில் குறையாத திமுக செல்வாக்கு! – Kumudam

Spread the love

சமீபத்தில் நடந்து முடிந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளன. எதிர்க்கட்சிகளின் கணிப்புகளைத் தகர்த்து, எந்தவிதப் பெரிய கூட்டணிக் கட்சிகளின் பலமும் இல்லாமல் தி.மு.க தனித்து நின்று கைப்பற்றியுள்ள இந்த ஈர்க்கக்கூடிய வாக்கு சதவீதம், அக்கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகளை மாற்றியுள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், இந்த இரண்டு தொகுதிகளும் பாரம்பரியமாக அ.தி.மு.க ஆதிக்கம் செலுத்தும் பகுதிகள் என்பதால் நாம் தேர்தலைப் புறக்கணிக்கலாம் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கருதியுள்ளனர். 

ஆனால், இந்த யோசனையைத் துளியும் ஏற்க மறுத்த உதயநிதி ஸ்டாலின், களத்தில் நிற்பதே சரி என்றும், தேர்தலைப் புறக்கணித்தால் அது பலவீனமாகப் பார்க்கப்படும் என்றும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மேலும், வேட்பாளர் தேர்வு முதல் களப்பணிகள் வரை அனைத்துப் பொறுப்புகளையும் தாமே ஏற்றுக்கொண்டு வியூகம் வகுத்தார்.

சீனியர்களை மட்டுமே நம்பியிருந்தால் வேலைக்காகாது என்பதை உணர்ந்த உதயநிதி, ஒரு புதிய வியூகத்தைக் களம் இறக்கினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் என சுமார் 700 முதல் 800 பேரை இரண்டு தொகுதிகளிலும் முழுக் கட்டுப்பாட்டில் இறக்கினார்.

இளைஞரணி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்திக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். முன்னாள் அமைச்சர்களின் வழிகாட்டுதலோடு, இந்த இளைஞர் பட்டாளம் செய்த தீவிரப் பிரச்சாரமே தி.மு.கவின் வாக்கு வங்கியைச் சரிவிலிருந்து தடுத்து காப்பாற்றியது.

வழக்கமான கூட்டணிக் கட்சிகள் உடன் இல்லாத சூழலிலும், மதுராந்தகத்தில் 29 சதவீத வாக்குகளையும், தாராபுரத்தில் 31 சதவீத வாக்குகளையும் தி.மு.க தக்கவைத்துள்ளது. குறிப்பாகத் தபால் வாக்குகளில் தி.மு.க முதலிடம் பிடித்தது அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கூட்டணி பலம் இல்லாவிட்டால் டெபாசிட் கிடைக்காது என்ற விமர்சனங்களுக்கு இந்தத் தேர்தல் முடிவு தக்க பதிலடியைக் கொடுத்துள்ளதாகத் தி.மு.கவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இடைத்தேர்தலில் கிடைத்த வாக்கு சதவீதம் நிர்வாகிகளுக்கு உற்சாகம் அளித்துள்ளது. வரவிருக்கும் தேர்தல்களிலும் இதே ‘இளைஞரணி வியூகத்தை’த் தொடர உதயநிதி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இளம் வேட்பாளர்களைக் களம் இறக்குவதன் மூலம் இளைய தலைமுறை வாக்காளர்களை ஈர்க்க முடியும் என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், மூத்த தலைவர்களின் மனது புண்படாமல் சமநிலையைப் பேணவும் கட்சித் தலைமை கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *