உதயநிதி ஸ்டாலின் கைது: “விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால்…" – ஸ்டாலின் கேள்வி

Spread the love

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “காவிரி உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, த.வெ.க. அரசின் அலட்சிய ஆணவப் போக்கைக் கண்டித்து தஞ்சை கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, த.வெ.க. அரசின் கையாலாகாத்தனத்தை அம்பலப்படுத்தினார்.

நிர்வாகத் திறனற்ற டம்மி முதலமைச்சரால் காவிரி நீரைக் கொண்டுவர முடியவில்லை, மேகதாது அணையைத் தடுக்க பேசவும் முடியவில்லை, விவசாயிகள் வேதனையில் கண்ணீர் வடிக்கையில், அமைச்சர்கள் முதலமைச்சர் நடித்த படத்தை பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள், ஜோக்கர் அமைச்சரவை தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் வைத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

இதற்கு இதுவரை ஆட்சியாளர்களால் பதில் சொல்ல முடியவில்லை. பிரச்சினையைத் திசைதிருப்ப எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வீட்டுக்கு வந்த போலீஸ் படை, அவரை அராஜகமாகக் கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றுள்ளது.

நாளை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது, எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருக்கக் கூடாது என்று நினைத்து இந்த நடவடிக்கையைத் தொடங்கி இருக்கிறார்கள்.

நாடு முழுவதும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் காட்டிய எதிர்ப்புக்குப் பிறகு, ‘கைது செய்யும் எண்ணம் இல்லை, விசாரணை முடிந்ததும் விடுவித்துவிடுவோம்’ என்று நீதிமன்றத்தில் த.வெ.க. அரசு வழக்கறிஞர் சொல்லி இருக்கிறார்.

விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால் சென்னையிலேயே வைத்து நடத்தி இருக்கலாமே? எதற்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்ல வேண்டும்? ‘உதயநிதியை இன்றே விடுதலை செய்ய வேண்டும்’ என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கும் உத்தரவு, த.வெ.க.வின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி!

ஆட்சிக்கு வந்தது முதல் தன்னையும் தனது அமைச்சர்களையும், ஆட்சியையும் விமர்சிப்பவர்களைக் கைது செய்யும் ஒரே வேலையைத்தான் முதலமைச்சர் விஜய் பார்த்து வருகிறார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

உதயநிதி தனது உரையில் ஆபசமாக எதுவும் பேசவில்லை. யாரையும் குறிப்பிடவில்லை. அவர் பேசாத ஒன்றை பேசியதாகச் சிலர் பரப்பியதைச் சரிபார்க்காமல் அரசியல் தலைவர்கள் சிலர் உதயநிதியைக் கண்டிப்பது பிரச்சினையை திசைதிருப்புவது ஆகும். உதயநிதி தவறுதலாகப் பேசுகிறவர் அல்ல. அப்படியே தவறுதலாகப் பேசினாலும், உடனடியாக மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர்.

தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்துள்ள கழக உடன்பிறப்புகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்!

ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்.

தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *