Business
oi-Velmurugan P
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையிலிருந்து இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட பணத்தைச் சரிபார்த்தபோது, ரூ. 4.36 லட்சம் பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டது. பணம் பற்றாக்குறையாக உள்ள நிலையில், அதனை ஆய்வு செய்த போது, சுமார் 7.40 கோடி கள்ளநோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பணம் பற்றாக்குறையாக இருந்ததால் தான் இந்த மிகப்பெரிய கள்ளநோட்டு பிரச்சனை அம்பலத்திற்கு வந்துள்ளது என அதிகாரி ஒருவர் கூறினார்.
கள்ள நோட்டுகளை கடைகளில் மாற்றினாலே கம்பி தான் எண்ண வேண்டும்.. ஆனால் வங்கிகளில் இருந்து ரிசர்வ் வங்கிக்கே கள்ளநோட்டு போயிருக்கிறது. அதுவும் பிரபலமான தேசிய வங்கியில் இப்படியான ஒரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட பணத்தைச் வழக்கமான முறையில் சரிபார்த்தபோது, ரூ. 4.36 லட்சம் பற்றாக்குறை இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தணிக்கையில், சுமார் ரூ. 7.40 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை மேலாளர் நிஷா சிங்கின் வெளியிட்ட தகவலின் படி, ஆகஸ்ட் 10-11 தேதிகளில் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட பணத்தை ஒப்பிட்டுச் சரிபார்த்தபோது ரூ. 4.36 லட்சம் பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அப்போதுதான் இந்த முரண்பாடு முதலில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சஹாரன்பூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி வட்ட அலுவலகத்தில் விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையின்போது, பணக் கிடங்கில் சுமார் ரூ. 7.40 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
“விசாரணை இன்னும் முழுமையடையவில்லை,” என்று கூறிய பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை மேலாளர் நிஷா சிங், விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே கள்ள நோட்டுகள் எவ்வாறு கிடங்கிற்குள் வந்தன என்பது குறித்த விவரங்கள் தெளிவாகத் தெரியும் என்று தெரிவித்தார்.
வழக்கமான சரிபார்ப்பு செயல்முறையின்போது தணிக்கைக் குழு கள்ள நோட்டுகளைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார். இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பாக வங்கியின் மூத்த அதிகாரியிடமிருந்து புகார் பெறப்பட்டதாக சஹாரன்பூர் காவல் கண்காணிப்பாளர் அபினந்தன் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறுஐகயில், பணத்தை ஒப்பிட்டுச் சரிபார்த்தபோது தணிக்கைக் குழு ரூ. 7.40 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளைக் கண்டறிந்துள்ளார்கள். பணக் கிடங்கிற்குள் பணம் கொண்டுவரப்பட்ட விதம், வங்கி பராமரிக்கும் பதிவேடுகள் மற்றும் நோட்டுகளை எண்ணுதல், கட்டுதல் மற்றும் கணக்கு சரிபார்த்தல் ஆகியவற்றிற்குப் பொறுப்பான நபர்கள் ஆகியோரை மையமாகக் கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாகம் நான்கு பேரை சஸ்பெண்ட் செய்துள்ளது; அதேவேளையில், அவர்களின் தனிப்பட்ட பங்களிப்பு அல்லது பொறுப்பு என்ன என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை .
இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில், கோட்ட அலுவலகத்தின் மூத்த மேலாளரும் நோடல் அதிகாரியுமான ரவி குமார் , ஹரியானாவின் ஜகத்ரி, கேரா பஜாரில் உள்ள கரன்சி செஸ்ட் மேலாளர்களான சுஷில் சர்மா மற்றும் அமித் குமார் ஆகியோர் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளனர். நான்காவது நபர் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இதற்கிடையில், 4.36 லட்சம் ரூபாய் ரொக்கப் பற்றாக்குறை தொடர்பாக, பராமரிப்புப் பணியாளர் விஷால் குமார் மீதும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விரு விவகாரங்கள் குறித்தும் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறையினர் கூறினார்கள்.
சந்தேகத்திற்குரிய கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படவோ அல்லது வங்கியின் எந்தவொரு கிளைக்கும் விநியோகிக்கப்படவோ இல்லை என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கிளைகளிலிருந்து பெறப்பட்ட பணம், பணம் செலுத்திய மற்றும் திரும்பப் பெற்றதற்கான பதிவுகள், பணம் எண்ணுதல் மற்றும் கட்டுதல் நடைமுறைகள், கணக்குச் சரிபார்ப்பு ஆவணங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட பணப் பரிமாற்றப் பாதைகள் அனைத்தும் இனி விசாரணையில் ஆய்வு செய்யப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

