அது மட்டுமின்றி, ஒன்றிய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்ச சதவிகிதத்தைக் குறைப்பதைப் பற்றி முடிவு பின்னர் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டின் இடங்களை ஒப்படைத்த பின்பு சதவீதத்தை குறைத்து “All India merit list” மூலம் இடங்கள் நிரப்பப்பட்டால், அது தமிழ்நாட்டின் அரசு மருத்துவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரே “அந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டிக்குரிய 152 இடங்களை சரண்டர் செய்கிறோம்” என ஒப்புக்கொண்ட காரணத்தால், “நிரப்பப்படாமல் உள்ள 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு மாற்ற வேண்டும்” என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, இதயநோய், புற்றுநோய், நரம்பியல் தொடர்பான நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் உயர்தர சிகிச்சைக்கும் பின்னடைவை ஏற்படுத்தும்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்து அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு மேற்கொள்ளும் இட ஒதுக்கீடு, கழக அரசு எடுத்த நடவடிக்கைகளால் 2022-இல் மீண்டும் உறுதி செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு மேற்கொண்டு கிராமப்புற மக்களுக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு மிக முக்கியமான காரணியாக இருந்துள்ளது.