உலகை கலங்கவைத்த புதிய சிப் தொழில்நுட்பம்.. சத்தமே இல்லாமல் சீனா செய்த காரியம்! அரண்ட அமெரிக்கா | China Semiconductor Industry: Challenges ASML With Homegrown DUV Lithography Machine: What It Means

Spread the love

International

oi-Vigneshkumar

பெய்ஜிங்: இந்த காலத்தில் செமிகண்டக்டர் துறை தான் மிக முக்கியமான ஒரு துறையாக மாறி வருகிறது. ஏஐ தொடங்கி மின்சார கார்கள் வரை அனைத்திற்கும் இந்த செமிகண்டக்டர்கள் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளும் செமிகண்டக்டர் துறையில் கவனம் செலுத்தி, மிக பெரிய முதலீடுகளை செய்து வருகிறது. சீனாவும் இதில் பெரியளவில் கவனம் செலுத்தி வரும் சூழலில், இதில் மிக பெரிய மாற்றம் ஒன்று நடந்துள்ளது.

இந்த செமிகண்டக்டர் துறையில் சமீபத்திய ஆண்டுகளில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்துவிட்டன. ஆனாலும், இந்த துறையில் பல ஆண்டுகளாக ஒரு விஷயம் மட்டும் மாற்ற முடியாத உண்மையாக இருந்து வந்தது. அதாவது உலகின் அதிநவீன சிப் உற்பத்திக்கு தேவையான லித்தோகிராபி (Lithography) இயந்திரங்களை தயாரிப்பதில் நெதர்லாந்தை சேர்ந்த ASML நிறுவனத்துக்கு இணையாக வேறு யாரும் உருவானது இல்லை.

China Semiconductor Industry

சீன தொழில்நுட்பம்

ஆனால், அந்த நிறுவனத்திற்கே சவால் விடுக்கும் வகையில் சீனா புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இந்த லித்தோகிராபி இயந்திரங்களை தனது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சீனா சொந்தமாக உருவாக்க ஆரம்பித்துள்ளது. இந்த செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில், ஆசியா முழுக்க செமிகண்டக்டர் நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிந்தன. குறிப்பாக ASML நிறுவனத்தின் பங்குகள் மிக பெரியளவில் சரிந்தன.

அதேநேரம் சீனா இந்த இயந்திரங்களை உருவாக்கிய உடனேயே ASML நிறுவனத்தின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிடும் என்று இல்லை.. இருப்பினும், செமிகண்டக்டர் துறையில் மேற்கத்திய நாடுகளின் தொழில்நுட்பத்தை நம்பியிருக்கும் நிலையை மாற்ற சீனா தீவிரமாக முயன்று வரும் சூழலில், இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக சீனாவுக்கு ASML நிறுவனம் அதிநவீன இயந்திரங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை அமெரிக்கா கட்டுப்படுத்தி வருகிறது. அந்த தடைகளுக்கு உடைக்கும் வகையிலேயே சீனா சொந்த தொழில்நுட்பத்தில் லித்தோகிராபி இயந்திரங்களை உருவாக்க ஆரம்பித்துள்ளது.

DUV என்றால் என்ன?

ஒரு சிப்பை உருவாக்குவதில் மிக முக்கியமான கட்டம் லித்தோகிராபி தான். சிலிக்கான் தகடுகளில் மிக சிறிய செமிகண்டக்டர் டிசைனை அச்சிடும் பணியை இந்த இயந்திரங்கள் தான் செய்கின்றன. உலகின் அதிநவீன ஏஐ சிப்கள் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட பிராசஸர்களை தயாரிக்க இயூவி எனப்படும் Extreme Ultraviolet இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் இப்போது வரை ASML நிறுவனத்துக்கு மட்டுமே முழுமையான ஆதிக்கம் இருக்கிறது.

இந்த இயூவி இயந்திரத்தை சீனாவால் உற்பத்தி செய்ய முடியவில்லை. ஆனால், இதற்கு ஒரு படி கீழே இருக்கும் Immersion DUV இயந்திரத்தை சீனா வெற்றிகரமாக உருவாக்கிவிட்டது. இதன் மூலம் அதிநவீன ஏஐ சிப்களை தயாரிக்க முடியாது என்றாலும் கார்கள், ஸ்மார்ட்போன்கள், தொழிற்சாலை உபகரணங்கள் மற்றும் பல்வேறு மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் சிப்களை எளிதாக தயாரிக்க முடியும்.

என்ன மாறும்?

சீனா தனது சொந்த லித்தோகிராபி இயந்திரங்களை வெற்றிகரமாக உற்பத்தி செய்யத் தொடங்கினால், சீனாவுக்கு வெளிநாடுகளில் இருந்து செமிகண்டக்டர் இறக்குமதி செய்ய தேவைப்படாது. இதன் காரணமாகவே சீனாவின் இந்த புதிய தொழில்நுட்பம் குறித்த தகவல் வந்தவுடன் செமிகண்டக்டர் நிறுவனங்களின் பங்குகள் பெரியளவில் சரிந்தன.

அடுத்து என்ன?

அதேநேரம் சீனா உடனடியாக ASMLஐ காலி செய்ய முடியும் என சொல்ல முடியாது. ஒரு சில இயந்திரங்களை தயாரிப்பது வேறு.. அவற்றை 24 மணி நேரமும் இடையூறு இல்லாமல், அதிக உற்பத்தி திறனுடன், பிழைகள் இல்லாமல் தொழிற்சாலைகளில் தயாரிப்பது வேறு! சீனா இப்போது குறைந்தளவில் ஆய்வகத்தில் தயாரித்தாலும் அதை தொழிற்சாலையில் இதே துல்லியத்துடன் தயாரிக்க முடியுமா என்றால் அதற்கு உறுதியான பதில் இல்லை.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் சீனாவின் புதிய டியூவி லித்தோகிராபி இயந்திரம் உலக செமிகண்டக்டர் துறையை ஒரே இரவில் மாற்றிவிடாது. செயல்திறன், உற்பத்தி அளவு, சேவை நெட்வொர்க் மற்றும் தொழில்நுட்பம் என அனைத்திலும் இன்னும் ASML தான் இன்னும் முன்னணியில் உள்ளது. ஆனால், மேற்கத்திய நாடுகளின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மீறி, தனது சொந்த தொழில்நுட்பத்தை உருவாக்கும் திறனை சீனா படிப்படியாக வளர்த்து கொண்டு வருவதை இது காட்டுகிறது. எனவே, இது ASMLக்கு உடனடி அச்சுறுத்தலாக இல்லை என்றாலும், அடுத்த 10 ஆண்டுகளில் உலக சிப் தொழில்துறையின் போட்டி அதிகரிக்கும் என்பதையே இது காட்டுகிறது!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *