உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜில் ரயில்வே டிக்கெட் விற்பனையாளர் சஞ்சீவ் வீட்டில் கடந்த 5ம் தேதி கொலை வழக்கு ஒன்றில் ஜாமீனில் வெளிவந்த 23 வயது வாலிபர் ஒருவர் பணம் திருடுவதற்காக நுழைந்தார். அப்போது அந்த வீட்டிற்குள் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் விழித்துக்கொண்டனர். இதனால் அந்த வாலிபர் தம்பதிகளை கொலை செய்தார். மேலும், கொலை செய்யப்பட்ட பெண்ணை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இந்தச் சம்பவத்தில் அந்தத் தம்பதியினரின் மகள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவத்திற்கு பிறகு அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். அவர் அங்குள்ள வனப்பகுதிக்குள் மறைந்து இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே வனப்பகுதியை சுற்றி வளைத்து தேடினர். இதில் ஒரு வாரத்திற்குப் பிறகு, யோகேஷ் என்கிற அந்த வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவரை கைது செய்ய முயன்றபோது தப்பியோட முயன்றார். இதனால் போலீஸார் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அவரின் இரு கால்களிலும் குண்டுகள் பாய்ந்து காயங்கள் ஏற்பட்டன.
அவரை கைது செய்து விசாரித்த போது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இது குறித்து போலீஸார் கூறுகையில், “விசாரணையின் போது, அந்த நபர் தான் அடிக்கடி அந்தத் தம்பதி வசிக்கும் பகுதிக்குச் சென்று வந்ததாகக் கூறினான். ஒரு நாள், ரயில்வே டிக்கெட் விற்பனையாளராகப் பணிபுரிந்த 32 வயது கணவர், பணத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்வதைக் கவனித்ததாகவும், அவருடன் அவரது மனைவி ஷிகா வருவதை அடிக்கடி பார்த்ததாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். வீட்டின் சுற்றுச் சுவரைத் தாண்டி உள்ளே நுழைந்ததாகக் கூறிய அவர், கணவர் விழித்திருப்பதைக் கண்டதும், அவரை மரக்கட்டையால் தாக்கியதாகவும், அதனால் அவர் கீழே விழுந்து உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.
அந்தப் பெண் கூச்சலிட்டு உதவி கோர முயன்றார், ஆனால் அவரது செல்போனைப் பறித்து அணைத்துவிட்டு அந்தப் பெண்ணைத் தாக்கி, அவரது துப்பட்டாவைக் கொண்டு கழுத்தை நெரித்து கொன்றதாக தெரிவித்துள்ளார். மேலும் அப்பெண்ணை கொலை செய்த பிறகு அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர்களது மகள் இத்தாக்குதலில் காயம் அடைந்ததாகவும் யோகேஷ் தெரிவித்தார்” என போலீஸார் தெரிவித்தனர். போலீஸாரை கண்டதும் யோகேஷ் துப்பாக்கியால் சுட்டதாகவும், எனவே பாதுகாப்புக்காக திரும்ப சுட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.