அருகே மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்களிடம் அந்தக் கண்ணீர் அஞ்சலி போஸ்டரைக் காட்டி அவர் வீடு எங்கே இருக்கிறதென விசாரித்தோம். அவர்கள் சொன்ன வழிப்படி ஜி.எம் பேட்டைக்குள் நுழைந்தோம். குடியிருப்புப் பகுதிக்குள் நுழையும்போதும் மோகனின் பிரமாண்ட கண்ணீர் அஞ்சலி பேனர்தான் நம்மை வரவேற்றது.
30 ஆண்டுகளுக்கு முன்பு மீனவர்களுக்கெனக் கட்டிக் கொடுக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது மாடியில்தான் இருக்கிறது மோகனின் வீடு. தலையைக் கொஞ்சம் குனிந்தபடி உடம்பை வளைத்து நெளித்துதான் சிங்கத்தின் வீட்டுக்குள்ளே நுழைய முடிந்தது.

நரைத்த தாடி மீசையுடன் இருக்கும் மோகனின் புகைப்படம் முன்பு ஒரு காமாட்சி விளக்கை ஏற்றி வைத்து, ஓர் இலையில் கொஞ்சம் சோற்றையும் ஒரு தொடுகாயையும் கொட்டி வைத்திருந்தார்கள். “இன்னையோடு அவன் போயி ஏழு நாள் ஆகுது. தாத்தனும் அப்பனும்தான் கடல் கடலுன்னு இந்த உப்புக் காத்துலயே உடம்பை நோவடிச்சு கிடக்குறானுவ, நீயாச்சு படி படின்னு சொன்னேன், கேட்கவே இல்லையே. சின்ன வயசுல இருந்தே அவனுக்கு இந்தக் கடல்தான் எல்லாம்.
15 நாளு முழுக்க கடல்ல கிடப்பான். வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் படுத்து தூங்கிட்டு திரும்பயும் கடலுக்குப் போயிடுவான். இந்த ஆத்தாவ பிரிஞ்சு கூட இருப்பான். அந்தக் கடலைப் பிரிஞ்சு இருக்கவே மாட்டான். இன்னைக்கு அந்தக் கடலே அவனைத் தின்னு செரிச்சிடுச்சே…’ என ஆற்றாமையில் பேசுகிறார் மோகனின் அம்மா. மோகனுக்கு இரண்டு மகள்கள்.
தேவேஷ் என்ற ஒரு குட்டிப் பேரனும் இருக்கிறார். சிங்கத்துக்குத் தன்னுடைய பேரனின் மீது கொள்ளை அன்பு. புயலில் சிக்கி உயிரிழந்த மோகனின் உடல் ஆந்திராவின் மண்ணூரில் ஒதுங்கியிருக்கிறது. முகம் சிதைந்து கை கால்கள் விரைத்து அடையாளமே தெரியாமல் இருந்திருக்கிறது மோகனின் உடல். மோகனின் கையில் ‘தேவேஷ்’ என பேரனின் பெயர் பச்சைக் குத்தியிருப்பதைப் பார்த்துதான் குடும்பத்தினர் உடலை அடையாளம் கண்டிருக்கின்றனர்.