எதிரிகளை துவம்சம் செய்யும் வராஹி தேவி…பூமியைக் காக்கும் பஞ்சமித் தாயின் மகிமை! – Kumudam

Spread the love

பலன் தரும் பரிகாரம்! – வி.ராம்ஜி

எதிரிகளை துவம்சம் செய்யும் வராஹி தேவி!
பூமியைக் காக்கும் பஞ்சமித் தாய்!

சப்த கன்னியரில் ஒருத்தி வராஹி. மொத்தம் உள்ள ஏழு பேரில், ஐந்தாவது நிலையில் இருப்பவள். ஆகவே, பஞ்சமி தாய் என்பார்கள். அதாவது பஞ்சங்களைப் போற்றுபவள் என்று அர்த்தம்!

பண்டாசுர வதத்தின் போது, அன்னை லலிதையால் அம்பிகையின் சக்தியால் அவள் உடலில் இருந்து தோற்றுவிக்கப்பட்டவர்கள் சப்தகன்னியர்! ப்ராம்மி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்திராணி மற்றும் சாமுண்டி! இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவளாகத் திகழ்கிறாள் வராஹி. மனித உடலும், வராக {பன்றி} முகமும் கொண்டவள். கோபம் என்றால் கடும் உக்கிரமும் அன்பென்றால் கருணை ததும்புபவளாகவும் இருப்பவள்!  லலிதாம்பாளின் படைத்தலைவி இவள். சேனாதிபதியாகப் போர் செய்தவள்! இவளது ரதம் கிரி சக்கர{காட்டு பன்றிகள் இழுக்கும்} ரதம் என்கிறது புராணம்!

ஸ்வப்ன வராஹி, அஷ்வாரூட வராஹி, ஆதி வராஹி, லகு வராஹி என பல வடிவங்கள் உள்ளன. ஒவ்வொரு வராஹியும்  நீலம், சிவப்பு, மஞ்சள் என்று பல உடைகள், பல ஆயுதங்களுடன் திகழ்பவர்கள்! பொதுவாக மஞ்சள் உடையும், முக்கியமாக கலப்பையும், உலக்கையும் (வாக்கு தண்டம் என்றும் சொல்லுவார்கள் ஆக தண்டம் ஏந்தியவள்) கொண்டவள்.

சிவாலயங்களில், சப்தகன்னியர் சந்நிதி இருக்கும். அதில் வராஹியும் தரிசனம் தருகிறாள். குறிப்பாக, திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் அற்புதமாகாக் காட்சி தருகிறாள். தஞ்சை பெரியகோயிலில் தனிச்சந்நிதியில் அருள்மழை பொழிகிறாள்!

திருவானைக்காவல் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி, வராஹி ஸ்வரூபம் என்பார்கள். அது தண்டநாத பீடமாகும். ஆகவே தான் அன்னை அங்கே நித்திய கன்னியாக குடிகொண்டிருக்கிறாள்!

வராஹரின் சக்தி என்றும், எமனின் சக்தி என்றும் சொல்லப்படுகிறாள் ஸ்ரீவராஹி.  வராஹம் என்றால் பன்றி. வராஹ மூர்த்தி பூமியை மீட்க அவதாரம் ஏற்றபோது, அவருக்கு உதவியவள் இந்த வராஹி. பன்றிக்கு இயல்பிலே வானை நோக்கும் சக்தி கிடையாது . எப்போதும் அது பூமியைப் பார்த்தே நடக்கும். ஆனால் வராஹ அவதாரம் எடுத்த பெருமாளுக்கோ பூமியை கடலில் இருந்து மீட்டு, தன் மூக்கின் நுனியில், அதாவது பூமியை ஒரு தூக்குதூக்கி தலையை உயர்த்தி  வைக்க வேண்டும் அப்படி பூமியை மூக்கு நுனியில் வைப்பதற்கு உதவியவள்தான் வராஹி தேவி!

வாழ்வில், பள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அன்பர்களை கரையேற்றி, உயர்த்திவிடும் கருணைத் தெய்வம் ஸ்ரீவராஹி தேவி! இல்லற வாழ்வுக்கு வளம் சேர்ப்பது மட்டுமின்றி, முக்கியமாக நம் குண்டலினியை உயர்த்தி, நமக்கு ஞானத்தை அருளக்கூடிய அதிசக்தி கொண்ட தேவதை இவள்!

குண்டலினி சக்தி உயர்ந்தால், வாழ்க்கை மொத்தமும் தானாகவே உயரும்! மூலாதாரத்தில் இருந்து குண்டலினி எழுந்து ஆக்ஞையை அடையும். அப்படியான ஒரு உந்துதலை தருபவள் வராஹி. அதனால்தான் இவளுக்கு, ஆக்ஞாசக்கரேஸ்வரீ எனும் திருநாமமும் தேவிக்கு உண்டு! 

ஸ்ரீவராஹி தன் கையில் வைத்துள்ள ஆயுதங்களில் முதன்மையானது கலப்பையும் தண்டமும்! கலப்பையின் வேலை மண்ணின் அடியாழம் வரை செல்லும் சக்தி கொண்டது. அதுபோல், முந்தைய பிறவியின் பாவங்களை எடுத்து, நம்மிடமிருந்து நகர்த்தி, நம்மை தூய்மைப்படுத்தி, குண்டலினி சக்தி மூலம் உயர்த்தும் வல்லமை கொண்டவள் ஸ்ரீவராஹி! அப்படி எழுந்த குண்டலினியைத் தட்டுவதற்குத்தான் அவள் கோல் எனும் தண்டத்தைக் கொண்டிருக்கிறாள்.

வராஹியை வணங்கினால், குண்டலினி சக்தி மேல்நோக்கி நகரும் வல்லமை உண்டாகும். அடுத்தடுத்து, அவளை பிரார்த்தித்து, தியானித்தால், நினைத்ததெல்லாம் நிறைவேறும். என்ன சொல்கிறோமோ அந்த வார்த்தைகளில் சக்தி குடியேறும். வாக்கு மொத்தமும் பலிக்கும்!

எதிரிகள் பலமிழப்பார்கள். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். வராஹியை வழிபடுபவர்களை, துர்தேவதைகள் ஒருபோதும் நெருங்காது. பில்லி சூனிய ஏவல்கள் தோற்றுப்  போகும்!  

மனத் தூய்மையும் தேக சுத்தமும், வராஹி வழிபாட்டுக்கு மிகவும் முக்கியம்.  தேவ குணமும் மிருக பலமும் கொண்ட மகா சக்தி ஸ்ரீவராஹி! அதனால்தான் அவளை உக்கிரமான தெய்வ சக்தி என்கிறார்கள். உண்மையில் தவறு செய்து விட்டவர்களை, அநீதி இழைத்தவர்களை, கண்ணீர் விட்டு முறையிட்டால் போதும்… துவம்சம் செய்து விடும் கோபக்காரி இவள்!
ஆனால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் குழந்தை குணம் கொண்டவள் ஸ்ரீவராஹி.

ஸ்ரீவராஹி காயத்ரி இது.
ஓம் ஸ்யாமளாயே வித்மஹே
ஹல ஹஸ்தாய தீமஹி
தந்நோ வராஹி ப்ரசோதயாத்

என்னும் மந்திரத்தை தினமும் சொல்லுங்கள். முடிந்தபோதெல்லாம் சொல்லுங்கள். நற்பலன்களைத் தந்தருள்வாள். வாழ்வில், பக்கத்துணையாக அருள்வாள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *