தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனை எதிர்த்து த.வெ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நடிகர் ஸ்ரீநாத். தமிழக மீன்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். கடந்த மே, 30-ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார் ஸ்ரீநாத். பின்னர், திருச்செந்தூர் அருகிலுள்ள அமலிநகர், மணப்பாடு, வீரபாண்டியன்பட்டிணம், ஆலந்தலை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் சந்திப்பு நடத்தினார். தொடர்ந்து திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் அருகிலுள்ள புன்னக்காயல் பகுதிக்குச் சென்றார்.
திறந்த வேனில் நின்று, “எல்லாருக்கும் வணக்கம், வணக்கம், வணக்கம். புன்னக்காயல் மக்களே ஐ லவ் யூ. ஐ லவ் யூ. உங்களோட அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப நன்றி. அதிக வாக்குகள் வித்யாசத்தில் என்னை ஜெயிக்க வச்ச உங்களுக்கும், நம்ம மக்களுக்கும் ரொம்ப நன்றி.” எனப் பேசினார். ”இது திருச்செந்தூர் தொகுதி அமைச்சரே” எனக் கூட்டத்தில் ஒருவர் உரக்கச் சொல்ல… மைக்கினை அருகில் உள்ள த.வெ.க நிர்வாகி ஒருவரிடம் கொடுத்துவிட்டு சிரித்தபடியே கையசைத்து அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.